வாலிபர் கொலை வழக்கில் 2 பேர் கைது

சிவகாசியில் வாலிபர் கொலை வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-05-08 18:49 GMT
சிவகாசி, 
சிவகாசி கீழத்திருத்தங்கல் பள்ளப்பட்டி ரோட்டில் உள்ள தேவராஜ் காலனியை சேர்ந்தவர் டேவிட்ராஜா (வயது 38). இவருக்கு கல்பனா என்ற மனைவியும், சுபா (10) என்ற மகளும் உள்ளனர். சிவகாசியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.  இந்தநிலையில் 4-ந்தேதி காலையில் சிவகாசி-சாத்தூர் ரோட்டில் உள்ள மயான பகுதியில் கழுத்து அறுத்த நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் அந்த பகுதியில் உள்ள ஒரு மதுக்கடைக்கு வழக்கமாக வந்து செல்லும் நபர்கள் குறித்தும் தீவிரமாக விசாரிக்கப்பட்டது. அப்போது வழக்கமாக வரும் விக்னேஷ்குமார் (31), ஸ்டாலின்(39) ஆகியோர் கொலை சம்பவத்துக்கு பின்னர் வரவில்லை என விசாரணையில் தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு பாபுபிரசாந்த், போலீசாரை பல பிரிவுகளாக பிரித்து விக்னேஷ் குமார், ஸ்டாலின் வழக்கமாக செல்லும் இடங்களை கண்காணிக்க உத்தரவிட்டார். இந்தநிலையில் விக்னேஷ்குமார், ஸ்டாலின் ஆகியோர் வாகன சோதனையின் போது சிக்கியதாக கூறப்படுகிறது.  கைதான விக்னேஷ்குமார், ஸ்டாலின் ஆகியோரிடம் எதற்காக இந்த கொலை சம்பவம் நடந்தது என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்