கிராம மக்கள் சாலை மறியல்

உளுந்தூர்பேட்டை அருகே குடிநீர் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-05-08 18:26 GMT
உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாண்டூர் கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் இக்கிராம மக்களுக்கு கடந்த சில வாரங்களாக போதிய குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்கக்கோரி ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 

இதனால் ஆத்திரமடைந்த அக்கிராம மக்கள் 30-க்கும் மேற்பட்டோர் காலி  குடங்களுடன் அங்குள்ள உளுந்தூர்பேட்டை-திருவெண்ணெய்நல்லூர் சாலையில் திரண்டதோடு, திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த  உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதனை ஏற்ற கிராம மக்கள் மறியலை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதோடு, 20 நிமிடம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்