தூய சிந்தாத்திரை மாதா ஆலய தேர்பவனி
தூய சிந்தாத்திரை மாதா ஆலய தேர்பவனி நடந்தது.
தொண்டி,
தொண்டியில் புனித சிந்தாத்திரை அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 10-நாட்கள் நடைபெற்றது. இதனையொட்டி ஆலயத்தில் தினமும் நவநாள் திருப்பலி மறையுரை மாதா மன்றாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நடைபெற்ற ஆடம்பர கூட்டுத் திருப்பலியை அருட்தந்தை மதுரை ஆனந்தம் தலைமையில் தொண்டி சிந்தாத்திரை மாதா ஆலய பங்குத்தந்தை சவரிமுத்து முன்னிலையில் அருட்தந்தையர்கள் செக்காலை எட்வின் ராயன், ஆவுடைப்பொய்கை ராஜ மாணிக்கம், காரங்காடு அருள் ஜீவா, ஏ.ஆர்.மங்கலம் அன்பரசு, திருவெற்றியூர் லாரன்ஸ், சூராணம் உதவிப் பங்கு தந்தை மெக்கன்ரோ ஆகியோர் நிறைவேற்றினர். அதனை தொடர்ந்து வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித சிந்தாத்திரை மாதா பவனி வந்து பக்தர்களுக்கு ஆசீர் வழங்கினார். நேற்று காலை திருவிழா நிறைவாக திருவிழா திருப்பலி அருட்தந்தை இருதயராஜ் தலைமையில் நடைப்பெற்றது. அதனை தொடர்ந்து கொடியிறக்கமும் இதனையொட்டி புதுநன்மை வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. ஆலய திருவிழாவில் ஐக்கிய ஜமாத், இந்து தர்ம பரிபாலன சபை நிர்வாகிகள், அமலவை அருட் சகோதரிகள் சபையின் மாநில தலைவி லீமாரோஸ், சிவகங்கை மறைமாவட்ட தொடர்பாளர் அருட்தந்தை சூசை மாணிக்கம் மற்றும் அருட்தந்தையர்கள், அமலவை அருட் சகோதரிகள், பங்கு நிர்வாகக் குழுவினர், இறைமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதனையொட்டி ஆலயம் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. ஏற்பாடுகளை தொண்டி பங்குத்தந்தை சவரிமுத்து மற்றும் பங்கு நிர்வாக குழுவினர் செய்து இருந்தனர்.