ஆட்டோ டிரைவரை அரிவாளால் வெட்டிய தந்தை-2 மகன்கள் கைது

ஆட்டோ டிரைவரை அரிவாளால் வெட்டிய தந்தை-2 மகன்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-05-08 17:49 GMT
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே உள்ள துத்திகுளம் காலணி தெருவைச் சேர்ந்தவர் சின்னகுட்டி (வயது 65). ஆலங்குளம் பஸ்நிலைய ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வருகிறார். காளத்திமடம் மாடசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ராமசாமி (34). இவரும் ஆட்டோ ஓட்டி வருகிறார்.
ஒரே பகுதியில் தொழில் செய்து வருவதால் இருவரும் நண்பர்களாயினர். இந்தநிலையில் ராமசாமிக்கும், சின்னகுட்டியின் குடும்பத்தில் உள்ள பெண் ஒருவருக்கும் செல்போன் மூலம் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே ராமசாமி நேற்று முன்தினம் இரவு அந்த பெண்ணுடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். இதை அறிந்த சின்னகுட்டி அந்தப் பெண் மூலம் ராமசாமியை துத்திகுளத்திற்கு வரவழைத்தார். அங்கு வந்த ராமசாமியை சின்னகுட்டி மற்றும் அவரது மகன்கள் ரவிச்சந்திரன் (35), சுந்தரம் (43) ஆகியோர் அரிவாள் மற்றும் கம்பு கொண்டு தாக்கினர். இதில் ராமசாமி படுகாயமடைந்தார்.
தகவல் அறிந்ததும் ஆலங்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராமசாமியை மீட்டு ஆலங்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னகுட்டி மற்றும் அவரது இரு மகன்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்