16,957 மாணவ-மாணவிகள் பிளஸ்-1 பொதுத்தேர்வை எழுதுகிறார்கள்
வேலூர் மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வை 16,957 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்
வேலூர்
தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு செவ்வாய்கிழமை தொடங்கி, வருகிற 31-ந் தேதி வரை நடக்கிறது. வேலூர் மாவட்டத்தில் இந்த தேர்வை 8,237 மாணவர்கள், 8,720 மாணவிகள் என்று மொத்தம் 16,957 மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர். அவர்களுக்காக 76 தேர்வு மையங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.
தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணிக்கு நிறைவடையும். மாணவர்களுக்கான தேர்வு வினாத்தாள் 6 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. அவை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தேர்வு மையத்துக்கு கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்கள் 76 பேர், துறை அலுவலர்கள் 76 பேர், வழித்தட அலுவலர்கள் 20 பேர், தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் 900 பேர் என்று சுமார் 1,500 ஆசிரியர்கள் தேர்வு பணியில் ஈடுபட உள்ளனர். மாணவர்கள் தேர்வில் காப்பி அடிப்பதை தடுக்க சுமார் 150 பேர் கொண்ட பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதைத்தவிர முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி தலைமையில் 4 பறக்கும்படைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பறக்கும்படையினர் மாவட்டம் முழுவதும் ரோந்து மேற்கொண்டு, அனைத்து மையங்களில் சோதனை மேற்கொள்ள உள்ளனர் என்று பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.