நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் தேரோட்டம்
நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
வெளிப்பாளையம்:
நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
நெல்லுக்கடை மாரியம்மன் கோவில்
நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த மாதம்(ஏப்ரல்) 29-ந் தேதி திருச்சாந்து சாத்தி, ருத்திராபிஷேகத்துடன் தொடங்கியது. இரவு பூச்சொரிதல் விழா நடைபெற்றது.
கடந்த மாதம் 30-ந் தேதி கொடியேற்றப்பட்டு, அம்மன் அம்ச வாகனத்திலும், இரவு சரஸ்வதி அலங்காரத்திலும் உட்பிரகாரத்தில் உலா நடைபெற்றது.விழா நாட்களில் தினமும் பூத வாகனம், சேஷ வாகனம், சிம்மம், யானை, குதிரை, ரிஷபம், கிளி உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் வீதி உலா நடைபெற்றது.
தேரோட்டம்
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடந்தது. முன்னதாக அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். இதை தொடர்ந்து தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கவுதமன், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராணி ஆகியோா்் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்
விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகளின் வழியாக சென்று நிலையை அடைந்தது.
செடில் உற்சவம்
இதைதொடர்ந்து காத்தவராய சுவாமி எழுந்தருளி செடில் உற்சவம் நடந்தது. பெண்கள் தங்களது குழந்தைகளை செடிலில் சுற்ற வைத்தனர்.
இன்று (திங்கட்கிழமை) மாலை அம்மனுக்கு தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சியும், நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை ரத அபிஷேகமும், 11-ந் தேதி மாலை ஊஞ்சல் உற்சவமும், 13-ம் தேதி மாலை புஷ்ப பல்லக்கில் வீதி உலாவும், 15-ந் தேதி உதிரவாய் துடைப்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து உள்ளனர்.