போலி உணர்ச்சிகளை வெளிப்படுத்துபவர்களை ராமர் ஆசிர்வதிப்பதில்லை- ராஜ் தாக்கரேவின் அயோத்தி பயணம் குறித்து சஞ்சய் ராவத் தாக்கு

ராஜ் தாக்கரேவின் அயோத்தி பயணம் குறித்து கருத்து தெரிவித்த சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத், போலி உணர்ச்சிகளை வெளிப்படுத்துபவர்களை ராமர் ஆசிர்வதிப்பதில்லை என கூறியுள்ளார்.

Update: 2022-05-08 16:43 GMT
கோப்பு படம்
மும்பை, 
ராஜ் தாக்கரேவின் அயோத்தி பயணம் குறித்து கருத்து தெரிவித்த சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத், போலி உணர்ச்சிகளை வெளிப்படுத்துபவர்களை ராமர் ஆசிர்வதிப்பதில்லை என கூறியுள்ளார். 
அயோத்தி பயணம்
நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, மசூதிகளுக்கு வெளியே ஒலிபெருக்கிகளை பயன்படுத்த கடும் எதிர்ப்பு தெரிவித்து அரசை சாடி வருகிறார்.  
இதன்மூலம், ஆளும் சிவசேனா அரசுக்கும் ராஜ் தாக்கரேவுக்கும் இடையே பனிப்போர் மூண்டுள்ளது. 
இந்நிலையில், முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவின் மகனும், மந்திரியுமான ஆதித்ய தாக்கரே அடுத்த மாதம் ஜூன் 10-ந் தேதி அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு செல்ல உள்ளதாக அறிவித்தார். 
இதேபோல நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவும் 5-ந் தேதி அயோத்தி செல்வதாக அறிவித்தார். 
இந்நிலையில் மந்திரி ஆதித்ய தாக்கரேவின் அயோத்தி பயணம் குறித்து சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் கூறியதாவது:-
ஆசிர்வதிப்பத்தில்லை...
மந்திரி ஆதித்ய தாக்கரேவுடன் மராட்டியம் மற்றும் நாடு முழுவதும் இருந்து சிவசேனா தொண்டர்கள் வருவார்கள். 
அயோத்தி கோவிலுக்கு செல்வது ஒன்றும் அரசியல் சார்ந்த விஷயம் இல்லை. இது எங்களின் நம்பிக்கை சார்ந்ததாகும். 
இந்துத்வாவின் உண்மையான சாரத்தை முன்னிலைப்படுத்த பல்வேறு பிரிவுகளால் ஆதித்ய தாக்கரேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 
இவ்வாறு அவர் கூறினார். 
மேலும் ராஜ் தாக்கரேவை மறைமுகமாக தாக்கிய அவர், “கடவுள் ராமர், போலி உணர்ச்சிகள் மற்றும் அரசியில் காரணங்களுக்காக தன்னை தேடி வருபவர்களை ஒருபோதும் ஆசிர்வதிப்பதில்லை. அத்தகையவர்கள் எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்” என்றார். . 
வருகைக்கு எதிர்ப்பு
பா.ஜனதா எம்.பி. பிரிஜ் பூஷன் சரண் சிங், ராஜ் தாக்கரேவின் அயோத்தி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். வட இந்தியர்களை அவமானப்படுத்தியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்கும்வரை, அவரை நகருக்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம் என்று எச்சரித்துள்ளார். 
மேலும், அவர் வட இந்தியர்களிடம் மன்னிப்பு கேட்கும்வரை, ராஜ் தாக்கரேவை சந்திக்க வேண்டாம் என்று உத்தரப்பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்திற்கு, அவர் வேண்டுகோள் விடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்