வேலூர் ஜெயிலில் 8-வது நாளாக முருகன் உண்ணாவிரதம்
பரோல் வழங்கக்கோரி வேலூர் ஜெயிலில் 8-வது நாளாக முருகன் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
வேலூர்
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன் வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடைய மனைவி நளினி பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார். தற்போது பரோலில் வந்துள்ள அவர் காட்பாடி பிரம்மபுரத்தில் உள்ள வீட்டில் தங்கி உள்ளார். முருகன் பரோல் வழங்கக்கோரி மத்திய, மாநில அரசுக்கு கடிதம் வழங்கியும் மற்றும் சட்ட போராட்டமும் நடத்தி வருகிறார். ஆனால் அவருக்கு இதுவரை பரோல் வழங்கப்படவில்லை.
அதனால் விரக்தி அடைந்த முருகன் பரோல் வழங்க வேண்டும் என்று கடந்த 2-ந் தேதி முதல் ஜெயிலில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். நளினி நேரில் சந்தித்து உண்ணாவிரதத்தை கைவிடும்படி விடுத்த வேண்டுகோளையும் நிராகரித்து விட்டார். இந்த நிலையில் 8-வது நாளாக முருகன் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார்.
இதுகுறித்து ஜெயில் அதிகாரிகள் கூறுகையில், 6 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என்று முருகன் அனுமதி கடிதம் வழங்காமல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவரின் உடல்நிலையை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
தற்போது முருகனின் உடல்நிலை சீராக உள்ளது. உண்ணாவிரதத்தை கைவிடும்படி அவரிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்றனர்.