விவசாய ஆராய்ச்சியின் பலன்கள் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டும்-முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை

விவசாய ஆராய்ச்சியின் பலன்கள் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்

Update: 2022-05-08 16:17 GMT
பெங்களூரு: விவசாய ஆராய்ச்சியின் பலன்கள் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

விதைக்கிறார்கள்

பெங்களூரு விவசாய பல்கலைக்கழகத்தில் நீர்நிலை மையம் தொடக்க விழா மற்றும் சிறப்பாக செயல்பட்டு வரும் விவசாய உற்பத்தி சங்கங்களுக்கு விருது வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, கலந்து கொண்டு திட்டங்களை தொடங்கி வைத்து பேசியதாவது:-
விவசாயிகள் உழவு செய்யாவிட்டால் நமது நிலை என்ன என்று யோசித்து பாருங்கள். பூமித்தாயை பாதுகாப்பவர்கள் விவசாயிகள். அவர்களின் வாழ்க்கை மழை, காலநிலையை நம்பி உள்ளது. 

மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் விதைகளை விதைக்கிறார்கள். அதிக மழை பெய்தாலும் கஷ்டம், குறைந்த மழை பெய்தாலும் கஷ்டம். விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் கஷ்டப்படுகிறார்கள்.

தடுப்பணைகள்

அவர்களுக்கு நிலையான வாழ்க்கையை வழங்க பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. ஆண்டு முழுவதும் ஏதாவது ஒரு பகுதியில் விவசாய பணிகள் நடக்கின்றன. வேறு எந்த மாநிலங்களிலும் இத்தகைய காலநிலை இல்லை. எண்ணெய் வித்துக்கள், சோளம், ராகி, பருத்தி, மிளகாய், தோட்டக்கலை, காபி என அனைத்தும் கர்நாடகத்தில் சாகுபடி செய்யப்படுகின்றன.

விவசாயிகளுக்கு பயன்படும் பணிகளை செய்ய வேண்டும். இதில் பல்கலைக்கழகங்களின் பங்கு அதிகமாக உள்ளது. விவசாய ஆராய்ச்சிகளின் பலன்கள் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டும். விவசாயிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும். புதிய பயிர்களின் நிலை என்ன என்பதை அறிய வேண்டும். கர்நாடகத்தில் ஏற்கனவே தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.

தன்னிறைவு

முழுமையான விவசாய திட்டத்தில் பால் உற்பத்தி தொழிலும் உள்ளது. விவசாய காடு திட்டத்தால் மழை நீரால் ஏற்படும் பாதிப்புகள் தடுக்கப்படும். அதிகாரிகள் அறிவியல் பூர்வமாக சிந்தித்து செயல்பட வேண்டும். உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்தால் மட்டுமே சுயமரியாதை வாழ்க்கை வாழ முடியும். நாம் உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துள்ளோம்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

இதில் மத்திய கிராம வளர்ச்சி-பஞ்சாயத்து ராஜ் மந்திரி கிரிராஜ் சிங், விவசாயத்துறை இணை மந்திரி ஷோபா, மாநில விவசாயத்துறை மந்திரி பி.சி.பட்டீல், தோட்டக்கலை மந்திரி முனிரத்னா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்