நாட்டு சர்க்கரை உற்பத்தியில் விவசாயிகள் ஆர்வம்
பெரியகுளம் பகுதியில் நாட்டு சர்க்கரை உற்பத்தியில் விவசாயிகள் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர்.
தேனி:
நாட்டு சர்க்கரை உற்பத்தி
தேனி மாவட்டத்தில் சுமார் 4 ஆயிரத்து 200 ஹெக்டேர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. பெரியகுளம், தேவதானப்பட்டி, ஜெயமங்கலம், தேனி, பாலார்பட்டி, போடி, சின்னமனூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கரும்பு சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
இங்கு சாகுபடி செய்யப்படும் கரும்பை சர்க்கரை ஆலைக்கு பெரும்பாலான விவசாயிகள் அனுப்பி வருகின்றனர். பெரியகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெல்லம் தயாரிப்பு பணிகளிலும் விவசாயிகள் பலர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது நாட்டு சர்க்கரை உற்பத்தியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். சர்க்கரை நோய் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மக்களிடம் நாட்டு சர்க்கரை குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டு பயன்பாடு அதிகமாகி உள்ளது.
டீக்கடைகளில் கூட நாட்டு சர்க்கரை டீ, காபியை மக்கள் விரும்பி சாப்பிடத் தொடங்கி விட்டனர். சந்தைகளில் நாட்டு சர்க்கரை தேவையை கருத்தில் கொண்டு பெரியகுளம் சுற்றுவட்டாரத்தில் உள்ள வடுகபட்டி, வடவீரநாயக்கன்பட்டி, லட்சுமிபுரம், தாமரைக்குளம் போன்ற கிராமங்களை சேர்ந்த 500 விவசாயிகள் இணைந்து உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் தொடங்கி உள்ளனர்.
வேலைவாய்ப்பு
காமாட்சிபுரத்தில் உள்ள சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தின் வழிகாட்டுதலுடன் தொடங்கப்பட்ட இந்த விவசாயிகள் குழுவுக்கு, நாட்டு சர்க்கரை உற்பத்தி தொடர்பான தொழில்நுட்ப பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இதையடுத்து பயிற்சி பெற்ற விவசாயிகள் வடவீரநாயக்கன்பட்டி, வடுகபட்டி பகுதிகளில் நாட்டு சர்க்கரை உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் நாட்டு சர்க்கரை மகளிர் சுயஉதவிக்குழுக்களின் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை சேர்ந்த விவசாயிகளிடம் கேட்டபோது, "நாட்டு சர்க்கரை உற்பத்தியால் விவசாயிகள் உற்பத்தி செய்யும் கரும்பை மதிப்புக்கூட்டப்பட்ட பொருளாக மாற்றி சந்தைப்படுத்த வழிவகை ஏற்பட்டுள்ளது. மாதம் சுமார் 1 டன் அளவுக்கு நாட்டு சர்க்கரை உற்பத்தி செய்கிறோம். மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் இவை சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது. சில்லரையில் ஒரு கிலோ ரூ.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தேனி மாவட்டம் மட்டுமின்றி மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைப்பதோடு, கிராமப்புற பெண்களுக்கான வேலைவாய்ப்பும் ஏற்பட்டுள்ளது" என்றனர்.