கைலாயநாதர் கோவில் கும்பாபிஷேகம்

விண்ணமங்கலத்தில் கைலாயநாதர் கோவில் கும்பாபிஷேகம்

Update: 2022-05-08 14:52 GMT
ஆரணி

ஆரணியை அடுத்த விண்ணமங்கலம் கிராமத்தில்  பழமையான காமாட்சியம்மன் சமேத கைலாயநாதர் சிவன்  கோவில் சிதலமடைந்து இருந்தது.

 இதையடுத்து முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் விண்ணமங்கலம் வி.ரவி, சிவனடியார்கள் யோகேஸ்வரன், காளிதாஸ், தேவிகாபுரம் முருகன் மற்றும் கிராம இளைஞர்கள் ஒன்றுகூடி கடந்த  8 ஆண்டு காலமாக கோவில் திருப்பணியை நடத்தி முடித்து இன்று தமிழ் முறைப்படி மகா கும்பாபிஷேகம் நடத்தினர். 

முன்னதாக கோவில் வளாகத்தில் யாக மேடைகள் அமைக்கப்பட்டு புனிதநீர் நிரப்பப்பட்ட கலசங்கள் வைத்து கோவை மணிவாசகர் அருட்பணி மன்றம் செயலாளர் ப.குமரலிங்கமனார் தலைமையில் சிவனடியார்கள் தமிழ் முறைப்படி வேத மந்திரங்கள் முழங்க யாக பூஜைகளை நடத்தினர். 

பின்னர்   பூஜிக்கப்பட்ட புனிதநீர் கலசங்களை   கோவில்  வலம் வந்து கருவறை கோபுரம், முகப்பு கோபுரம், அம்மன் கோபுரங்களுக்கு  புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தினர். 

அதனைத்தொடர்ந்து கருவறை கைலாயநாதர்,  காமாட்சி அம்மாளுக்கும், அய்யப்பன் பரிவார சாமிகள், புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அன்னதானமும் வழங்கப்பட்டது,

 இரவு சாமியை மலர்களால்  அலங்கரிக்கப்பட்டு  திருவீதி உலா நடைபெற்றது. 

 விழாவில் தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் எம்.எஸ்.தரணி வேந்தன், மேற்கு ஆரணி ஒன்றியக்குழு தலைவர் பச்சையம்மாள் சீனிவாசன், ஆரணி நகரசபைத் தலைவர் ஏ.சி.மணி, மாவட்ட கவுன்சிலர் அ.கோவிந்தராசன், நகரசபை துணைத்தலைவர் பாரி பி.பாபு, ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் ஜெயராணி ரவி, ,ஊராட்சி மன்ற தலைவர் ஏ.காந்தி, முள்ளிப்பட்டு எம்.எஸ்.ரவி உள்பட திரளான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

விழாவுக்கான ஏற்பாடுகளை கிராமமக்கள், விழாக் குழுவினர், இளைஞர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்