குன்னூரில் தந்தி மாரியம்மன் சிம்ம வாகனத்தில் வீதிஉலா
குன்னூரில் தந்தி மாரியம்மன் சிம்ம வாகனத்தில் வீதிஉலா
குன்னூர்
குன்னுார் மேல் கடை வீதியில் தந்தி மாரியம்மன் கோவில் உள்ளது. நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த கோவிலின் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் தொடங்கி மே மாதம் வரை நடைபெறும். 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு தேர்த் திருவிழா கடந்த ஏப்ரல் மாதம் 8-ந்தேதி கொடியேற்றத்துடன்தொடங்கியது கடந்த ஒரு மாத காலமாக விமரிசையாக நடைபெற்று வரும் தேர்த் திருவிழா நிகழ்ச்சியில் சித்திரை மண்டகப்படி திருவிழா நடைபெற்றது. காலை 8 மணிக்கு குன்னூர் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜை நடைபெற்றது. காலை 9 மணிக்கு சமுதாய முறைப்படி ஊர் பெரியவர்களுக்கு பரிவட்டம் கட்டி முதல் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கிருந்து அம்மன் சிம்ம வாகனத்தில் தேர் பவனி வந்தார். தேர் ஊர்வலத்தில் கிராமிய நடனங்களாக தப்பாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், உள்ளிட்டவற்றுடன், பக்தர்கள் ஆடல் பாடலுடன் மேளதாளம் முழங்க ஏராளமானோர் முளைப்பாரி எடுத்து ஊர்வலத்தில் கலந்துகொண்டனர். மதுரை வீரர் வேடமணிந்தவர் குதிரையில் வலம் வந்து தத்ரூபமாக கலந்து கொண்டது அனைவரையும் கவர்ந்தது. குன்னூர் பஸ் நிலையத்திலுள்ள விநாயகர் கோவிலிலுள்ள சக்தி விநாயகருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் மவுண்ட் ரோடு வழியாக மாரியம்மன் கோவிலை அடைந்தது. அங்கு அம்மனுக்கு அலங்கார அபிஷேகமும் சிறப்பு பூஜையும் நடைபெற்றது. பின்னர் விநாயகர் கோவில் மண்டபத்தில் அன்னதானம் நடைபெற்றது.