கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு 8 நாட்களில் 51 ஆயிரம் பேர் விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டனர்

கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து உள்ளது. கடந்த 8 நாட்களில் 51 ஆயிரத்து 500 பேர் விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டனர்.

Update: 2022-05-08 13:40 GMT
கன்னியாகுமரி, 
கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து உள்ளது. கடந்த 8 நாட்களில் 51 ஆயிரத்து 500 பேர் விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டனர்.
கன்னியாகுமரி
புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். ஏப்ரல், மே மாதங்களில் கோடை விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடு காரணமாக கோடை விடுமுறை நாட்களில் குறைவான சுற்றுலா பயணிகளே வந்தனர்.
தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் இல்லாததால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து உள்ளது.
1 லட்சத்து 40 ஆயிரம் பேர்
கன்னியாகுமரிக்கு வருகிறவர்கள் கடலின் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்வையிடுவார்கள். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் படகுகள் இயக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் படகில் சென்று விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டனர். இந்த மாதத்தில் (மே) கடந்த 8 நாட்களில் 51 ஆயிரத்து 500 பேர் படகில் சென்று விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டுள்ளனர். இதனால் கடந்த மாதத்தை விட இந்த மாதம் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
சுற்றுலா பயணிகள் உற்சாகம்
இந்தநிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான  ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரியில் குவிந்து கடற்கரை காற்றை உற்சாகமாக அனுபவித்தனர்.
சுற்றுலா பயணிகளின் வருகையையொட்டி கன்னியாகுமரி கடற்கரை களை கட்டியது. கடற்கரையில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்