தூத்துக்குடியில் மிட்டாய் கடை தீப்பிடித்து எரிந்தது

தூத்துக்குடியில் மிட்டாய் கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாகின.

Update: 2022-05-08 12:58 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் மிட்டாய் கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாகின.
தீவிபத்து
தூத்துக்குடி அசோக்நகரை சேர்ந்தவர் சிவசண்முகசுந்தரம். இவர் தூத்துக்குடி-பாளையங்கோட்டை ரோட்டில் வி.வி.டி. சிக்னல் அருகே மிட்டாய் மற்றும் வறுகடலை விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு சென்றாராம். நேற்று அதிகாலையில் திடீரென கடையின் உள்பகுதியில் இருந்து புகை வந்து உள்ளது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
சேதம்
அதன்பேரில் தூத்துக்குடி நிலைய அலுவலர் சகாயராஜ் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் கடையின் ஷட்டரை திறந்தனர். அங்கு தீ மளமளவென எரிந்து கொண்டு இருந்தது. உடனடியாக தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். மேலும் அக்கம் பக்கத்தில் பரவாமல் தடுத்தனர். இந்த தீவிபத்தில் பல லட்சம் மதிப்புள்ள ஸ்வீட், காரம், கடலை மற்றும் மூலப்பொருட்கள் உள்ளிட்டவை எரிந்து சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்