‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
மின் வாரியத்தின் துரித நடவடிக்கை
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி திருமுல்லைவாயில் டாக்டர் மூர்த்தி நகர் புத்துக்கோயில் அருகே அமைந்துள்ள மின் கம்பம் சேதமடைந்து அபாயகரமாக காட்சியளிப்பது தொடர்பாக ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் சுட்டிகாட்டப்பட்டது. இதற்கு தீர்வு காணும் விதமாக சேதமடைந்த மின்கம்பம் மின் வாரிய ஊழியர்களால் உடனடியாக சரி செய்யப்பட்டது. பிரச்சினையை உடனடியாக சரி செய்த மின் வாரியத்துக்கும் துணைபுரிந்த ‘தினத்தந்தி’க்கும் மக்கள் பாராட்டை தெரிவித்தனர்.
உடைந்த மூடி சரிசெய்யப்பட்டது
சென்னை நெசப்பாக்கம் விவேகானந்தர் நகர், ஹரி சங்கர் தெருவில் பள்ளி அருகே உள்ள பாதாள சாக்கடையின் மூடி உடைந்த நிலையில் இருப்பது தொடர்பாக ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்த மாநகராட்சி அதிகாரிகள் உடைந்த மூடியை உடனடியாக சரி செய்துள்ளனர். விரைந்து செயல்பட்ட மாநகராட்சி அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும் மக்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்.
வேகத்தடை வேண்டும்
நுங்கம்பாக்கம் மற்றும் மேல்நல்லூர் கிராம நகர்புறங்களில் 5000-த்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். எங்கள் நகர் புறங்களில் நுங்கம்பாக்கம் சாலை, பிஞ்சிவாக்கம் செல்லும் சாலைகளில் வேக தடையில்லாததால், அதிகமான விபத்துக்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமைகிறது. எனவே மேற்கண்ட இடங்களில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சீனிவாசமூர்த்தி, நுங்கம்பாக்கம்.
குடிநீர் குழாயில் அடைப்பு, வீணாகும் குடிநீர்
சென்னை புளியந்தோப்பு பேசின் பாலம் மின்சார வாரியம் பக்கத்தில் உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் குடிநீர் கசிந்து வீணாகி வருகிறது. இந்த நிலை தொடருமானால் விரைவில் இந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. எனவே குடிநீர் வாரியம் விரைந்து இந்த பிரச்சினையை சரி செய்யுமா?
- நசுருதீன், புளியந்தோப்பு.
ஒருவழிப்பாதை, இருவழிப்பாதை ஆனதோ!
சென்னை என்.எஸ்.சி. போஸ் சாலை ஒரு வழி சாலையாக இருந்தும் எதிர்திசையில் இருந்து வாகனங்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. இதனால் வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் இந்த சாலையில் நடந்து செல்லவே முடியாத சூழல் ஏற்படுகிறது. எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பார்களா?
- பழனி வெங்கட், பாரிமுனை.
சாலையை ஆக்கிரமிக்கும் கம்பிகள்
சென்னை தியாகராயர் நகர் பிரபல ஜவுளிக்கடை அருகில் இருக்கும் பிஞ்சாலா சுப்பிரமணியன் தெருவில் கட்டுமானப்பணி நடக்கிறது. ஆனால் கட்டுமானப்பணிக்கு தேவையான கம்பிகள் போன்ற பொருள்கள் சாலையின் பாதி இடத்தை அடைத்துக் கொண்டிருப்பதால், இந்த இடத்தில் பயணம் செய்யவே மக்கள் சிரமப்படுகிறார்கள். மேலும் சாலையின் இரண்டு பக்கத்திலும் வாகனம் வரும்போது இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சம்பந்தபட்ட அதிகாரிகள் இது குறித்து உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
- சிவசுப்பிரமணியம், தியாகராயர் நகர்.
விபத்துகள் தவிர்க்கப்படுமா?
சென்னை சாலிகிராமம் ஹரிகிருஷ்ணன் தெருவும், பாரதியார் தெருவும் இணையும் இடத்தில் உயர்நிலைப் பள்ளி உள்ளது. பள்ளி செல்லும் மாணவிகள் இந்த தெருக்களை தான் பெரிதும் பயன்படுத்துகிறார்கள். இந்த தெருக்களில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் வேகமாக செல்வதால் மாணவிகள் இந்த தெருக்களில் செல்லவே அச்சப்படுகிறார்கள். எனவே விபத்துக்கள் ஏற்படுவதை தடுப்பதற்கு மேற்கூறிய இரண்டு தெருக்களிலும் வேகத்தடை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
- ராமச்சந்திரன், சாலிகிராமம்.
ஆபத்தான நிலையில் மின் இணைப்பு பெட்டி
கோவூர் தனியார் ஆஸ்பத்திரி அருகே உள்ள மின் இணைப்பு பெட்டி திறந்த நிலையில் ஆபத்தாக காட்சியளிக்கிறது. மின் இணைப்பு பெட்டியின் மூடி கீழே விழுவதும், அருகில் உள்ள கடை ஊழியர்கள் அதை மூடி விடுவதும் வாடிக்கையாகி வருகிறது. எனவே ஆபத்தான நிலையில் இருக்கும் இந்த மின் இணைப்பு பெட்டியை சரி செய்ய மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
- சிவசங்கர். கோவூர்.
சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுவது எப்போது?
சென்னை அடையாறு இந்திரா நகர் 16-வது குறுக்கு தெரு மற்றும் 20-வது குறுக்கு தெருக்களில் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் செல்லும் மக்கள் அடிக்கடி விபத்துக்களில் சிக்குகிறார்கள். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
- சிவலிங்கம், அடையாறு.
நிழற்குடைக்காக காத்திருக்கும் மக்கள்
செங்கல்பட்டு மாவட்டம் மேற்கு தாம்பரம் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால் பயணிகள் அவதிக்குள்ளாகிறார்கள். மேலும் இது வெயில் காலம் என்பதால் பஸ்சுக்காக காத்திருக்கும் பெண்களும், முதியவர்களும் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே மக்களின் நிலை கருதி பஸ்நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
- பாஷா, மேற்கு தாம்பரம்.