ஆழ்வார்திருநகரியில் ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ கருடசேவை
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு கருடசேவை விமரிசையாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தென்திருப்பேரை:
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு கருடசேவை விமரிசையாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பிரம்மோற்சவ விழா
தாமிரபரணி நதிக்கரையோரம் சிறப்புபெற்ற நவதிருப்பதி கோவில்களில் 9-வது தலமான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக பக்தர்கள் இன்றி விழா எளிமையாக நடத்தப்பட்டது.இந்த ஆண்டிற்கான சித்திரை பிரம்மோற்சவ திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கருடசேவை
திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி பொலிந்துநின்றபிரான் திருவீதி உலா வருதல் நடைபெற்று வருகிறது. 5-ஆம் திருவிழாவான நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு கருடசேவை விமரிசையாக நடந்தது.
சுவாமி பொலிந்து நின்றபிரான் கருட வாகனத்திலும், நம்மாழ்வார் அன்ன வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் சுற்றுவட்டாரத்தில் இருந்து திரளான பக்தர்கள் குவிந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
தேரோட்டம்
திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகின்ற 11-ந்தேதியும்(புதன்கிழமை), தாமிரபரணி நதியில் தீர்த்தவாரி 12-ந்தேதியும்(வியாழக்கிழமை)நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல்அலுவலர், தக்கார், உபயதாரர்கள் மற்றும் ஊா்மக்கள் செய்து வருகின்றனர்.