செங்கல்பட்டு அருகே செங்கல் தொழிற்சாலை உரிமையாளர் கல்லைப்போட்டு கொலை
செங்கல் தொழிற்சாலையின் உரிமையாளர் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்டம், குன்னவாக்கம் ஊராட்சி, பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வந்தவர் மனோகர் (வயது 47). இவர் குன்னவாக்கம் ஏரிக்கரை அருகே சொந்தமாக சிமண்டு செங்கல் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகின்றார். இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். இவர் நேற்று முன்தினம் இரவு தொழிறசாலையில் தங்கியுள்ளார்.
இந்த நிலையில் நேற்று காலை வீட்டுக்கு வராததால் அவரது தந்தை முத்து அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது இரண்டு கால்கள் கட்டப்பட்டு முகத்தில் கல்லால் தாக்கப்பட்ட நிலையில் மனோகர் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதனையடுத்து செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன், சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் ஆகியோர் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மனோகரன் முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.