அரூரில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
அரூரில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
அரூர்:
தர்மபுரி மாவட்டம் அரூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அரூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு உதவி கலெக்டர் முத்தையன் தலைமை தாங்கினார். இதில் துறை அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர். அரூர், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். கூட்டத்தில், நெல் சாகுபடி விவசாயிகள் பயன்பெறும் வகையில் அரூரில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கவேண்டும். மரவள்ளிக்கிழங்கில் மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு ஒட்டுண்ணிகளை வழங்க வேண்டும். ஒவ்வொரு ஊராட்சியிலும் பகுதி நேரம் செயல்படும் வகையில், கால்நடை கிளை மருந்தகம் அமைக்க வேண்டும். விவசாயிகளுக்கு தரமான கால்நடை தீவனங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். சர்வேயர்கள் பற்றாக்குறையால் நில அளவை பணிகள் தடைப்படுவதை தடுக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தினர். இந்த கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று உதவி கலெக்டர் முத்தையன் கூறினார். இந்த கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டனர்.