சென்னிமலை முருகன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தக்குடங்களுடன் கிரிவலம்

சென்னிமலை முருகன் கோவிலில் அக்னி நட்சத்திர விழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்த குடங்களுடன் கிரிவலம் சுற்றி வந்தனர்.

Update: 2022-05-07 21:57 GMT
சென்னிமலை
சென்னிமலை முருகன் கோவிலில் அக்னி நட்சத்திர விழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்த குடங்களுடன் கிரிவலம் சுற்றி வந்தனர்.
உலக அமைதிக்காக...
சென்னிமலை முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டு்ம் சித்திரை மாதத்தில் அக்னி நட்சத்திர அன்னதான வழிபாட்டு மன்றம் சார்பில் உலக அமைதிக்காகவும், மழை வேண்டியும் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம்.
அதன்படி 39-வது ஆண்டு நிகழ்ச்சியாக கடந்த 5-ந் தேதி மாலையில், அடிவாரத்தில் உள்ள இடும்பன் கோவிலில் சிறப்பு அபிஷேகத்துடன் நிகழ்ச்சிகள் தொடங்கியது. முன்னதாக நூற்றுக்கணக்கான பக்தர்கள் வழிபாட்டு மன்ற நிர்வாகி சுப்புசாமி தலைமையில் கங்கை, யமுனை, சரஸ்வதி, கிருஷ்ணா, கோதாவரி, தாமிரபரணி உள்ளிட்ட நதிகளுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வந்தனர்.
தீர்த்த குடங்களுடன்...
பின்னர் நேற்று காலை ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்னிமலை மாரியம்மன் கோவிலில் இருந்து தீர்த்த குடங்களுடன் ஊர்வலமாக புறப்பட்டனர். அப்போது சென்னிமலை கைலாசநாதர் கோவில், அடிவாரத்தில் உள்ள விநாயகர் கோவிலில் தீர்த்த குடங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து தட்டாங்காட்டுபுதூர், வெப்பிலி, அய்யம்பாளையம், புதுப்பாளையம், தோப்புப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு ஊர்கள் வழியாக மலையை சுற்றி கிரிவலம் வந்தனர். மேலும் கிரிவல பாதையில் உள்ள கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் மாலை 6 மணிக்கு மலைமேல் உள்ள முருகன் கோவிலில் கணபதி ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை ஆகியவை நடைபெற்றது.
இன்று தீர்த்த அபிஷேகம்..
முக்கிய நிகழ்ச்சியாக முருகப்பெருமானுக்கு சப்தநதி தீர்த்த அபிஷேகம், 1,008 கலச அபிஷேகம் மற்றும் மழை வேண்டி மகா வருண ஜெப ஹோமம் ஆகியவை இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் நடைபெறுகிறது.
மதியம் 12 மணி அளவில் முருகப்பெருமானுக்கு மகா தீபாராதனை காட்டப்படுகிறது. அதைத்தொடர்ந்து உற்சவமூர்த்தி புறப்பாடு நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்கின்றனர். இறுதியில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

மேலும் செய்திகள்