கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
கன்னியாகுமரி:
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
சுற்றுலா தலம்
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். குறிப்பாக விடுமுறை நாட்களிலும், பண்டிகை காலங்களிலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும்.
இந்தநிலையில் சனிக்கிழமையான நேற்று விடுமுறை தினத்தையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. காலையில் சூரிய உதயத்தை பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
அவர்கள் சூரிய உதயம் பார்த்து விட்டு, கடலில் குளித்து, பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
படகு சவாரி
பின்னர் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்வையிட்டனர். மேலும், காந்தி மண்டபம், காமராஜர் மணிமண்டபம், கடற்கரை பகுதியில் உள்ள தமிழன்னை பூங்கா, பழத்தோட்டம் சுற்றுச்சூழல் பூங்கா ஆகியவற்றை பார்வையிட்டனர்.
சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் நடைபாதை வியாபாரம் களை கட்டியது. மேலும், போலீசார் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.