ஆடு-கோழிகளை பலியிட்டு 1500 கிலோ பிரியாணி

ேகாவில் திருவிழாவில் ஆடு, கோழிகளை பலியிட்டு 1500 கிலோ பிரியாணி தயாரிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாத்திரங்களில் வாங்கிச்சென்றனர்.

Update: 2022-05-07 20:25 GMT
திருமங்கலம்
ேகாவில் திருவிழாவில் ஆடு, கோழிகளை பலியிட்டு 1500 கிலோ பிரியாணி தயாரிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாத்திரங்களில் வாங்கிச்சென்றனர்.
கோவில் திருவிழா
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள அம்மாபட்டி கிராமத்தில் சடச்சியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. பிரசித்தி பெற்ற இந்த திருவிழா 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம். 
இந்த ஆண்டுக்கான விழா கடந்த வாரம் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. சுற்றுவட்டார கிராம மக்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். விழாவின் முக்கிய நிகழ்வான அசைவ பிரியாணி தயாரித்து பக்தர்களுக்கு வழங்கும் விழா நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்றது.  தேங்காய், பழம், பூ தட்டுகளுடன் பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய கோழி, கிடாய் பலியிடப்பட்டது. இந்த கோழிகள், ஆடுகளின் இறைச்சி சமைக்கப்பட்டு, 1500 கிலோ அரிசியில் அசைவ பிரியாணி தயார் செய்யப்பட்டது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள்
பின்னர் பக்தர்களுக்கு இந்த பிரியாணி வழங்கப்பட்டது. அதனை அவர்கள் பாத்திரங்களில் வாங்கி சென்றனர். இந்த நிகழ்ச்சியில் கிராமத்தைச் சேர்ந்த 20 சமுதாய மக்கள் கலந்து கொண்டனர். பன்னீர்குண்டு, பொக்கம்பட்டி, தங்கலாசெரி, சாத்தங்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து பிரியாணியை பெற்றுச் சென்றனர்.
 இந்த விழா குறித்து பக்தர்கள் கூறுகையில், சடச்சியம்மனை வேண்டிக்கொண்டால் நினைத்தது நிறைவேறும். பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறுவதற்கு கிடாய்களை கோவில்களில் தானமாக கொடுப்பார்கள். 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த திருவிழா நடத்தப்பட்டு வருகிறது, என்றனர்.

மேலும் செய்திகள்