பாளையங்கோட்டையில் டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி
பாளையங்கோட்டையில் டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி நடந்தது.
நெல்லை:
பாளையங்கோட்டை முருகன்குறிச்சி கால்வாய் அருகில் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு மது விற்பனையை முடித்துவிட்டு ஊழியர்கள் கடையை பூட்டி விட்டு சென்றனர். நேற்று மதியம் 12 மணிக்கு மீண்டும் கடையை திறக்க ஊழியர்கள் வந்தனர். அப்போது கடையின் வெளிப்புற பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தது. மேலும் உட்பகுதி கதவையும் உடைக்க முயற்சி நடந்தது தெரியவந்தது. நேற்று முன்தினம் இரவில் மர்ம நபர்கள் கடையை உடைத்து மதுபாட்டில்கள் மற்றும் பணத்தை கொள்ளையடிக்க முயன்றது தெரியவந்து உள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பாளையங்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் தடய அறிவியல் நிபுணர்களும் கடைக்கு வந்து தடயங்களை சேகரித்தனர். அப்போது மர்மநபர்கள், தாங்கள் உடைத்த பூட்டுகளை எடுத்துச்சென்று விட்டதும் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.