வீட்டைவிட்டு வெளியே செல்ல பாதை இல்லாததால் பெண் உள்பட 4 பேர் வீட்டில் முடக்கம்
வீட்டைவிட்டு வெளியே செல்ல பாதை இல்லாததால் பெண் உள்பட 4 பேர் வீட்டில் முடங்கி கிடந்தனர். இதுகுறித்த வீடியோ வைரலானதால் அதிகாரிகள் மாற்றுப்பாதையை ஏற்படுத்தி தந்தனர்.
ஆவுடையார்கோவில்,
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட குண்டகவயல் கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவர் தற்போது வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி விஜி. இவர்களுக்கு சபர்னா, ரோகிணி ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். விஜியுடன் அவரது தாயார் தெய்வானை வசித்து வருகிறார். இந்த நிலையில் விஜி தனது வீட்டிலிருந்து வெளியே செல்வதற்கு பாதை இல்லாததால் கடந்த சில நாட்களாக வீட்டிலேயே குடும்பத்துடன் முடங்கி கிடப்பதாக சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் கவிதாராமு உத்தரவிட்டார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அறந்தாங்கி தாசில்தார் காமராசு, ஆவுடையார்கோவில் சப்-இன்ஸ்பெக்டர் சாமிக்கண்ணு ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் அவர்களுக்கு தற்காலிகமாக புதிய பாதை அமைத்துக் கொடுக்கப்பட்டது. இன்னொரு பகுதியில் உள்ள பாதையில் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் அந்த பாதை அடைக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.