மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு
கரூரில் மாவட்ட அளவில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன.
கரூர், .
விளையாட்டு போட்டிகள்
கரூர் மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதனை கலெக்டர் பிரபுசங்கர் தொடங்கி வைத்தார்.
தடகளம்
இதில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தடகளப் போட்டிகளில் கை, கால் ஊனமுற்றோர் பிரிவில் கால் ஊனமுற்றோர், கை ஊனமுற்றோர், குள்ளமானோர், இருகால்களும் ஊனமுற்றோர்களுக்கும், பார்வையுற்றோர் பிரிவில் முற்றிலும் பார்வையற்றோர், மிக குறைந்த பார்வையற்றோர்களுக்கும், மனநலம் பாதிக்கப்பட்டோர் பிரிவில் புத்தி சுவாதினம் தன்மை முற்றிலும் இல்லாதவர்கள், புத்தி சுவாதினம் தன்மை நல்ல நிலையில் இருப்பவர்களுக்கும், காதுகேளாதோர் பிரிவு ஆகிய பிரிவுகளின் கீழ் 50 மீ, 100 மீ, 200 மீ, 400 மீ ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், 100 மீ சக்கர நாற்காலி, நின்ற நிலையில் தாண்டுதல் மற்றும் சாப்ட் பந்து எறிதல் போட்டியும் நடைபெற்றது.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கான குழு விளையாட்டுப் போட்டிகள் கை, கால் ஊனமுற்றோர் பிரிவில் இறகுப்பந்து, டேபிள் டென்னிஸ் போட்டியும், பார்வையற்றோர் பிரிவில் கையுந்து பந்து போட்டியும், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பிரிவில் எறிபந்து போட்டியும், காதுகேளாதோர் பிரிவில் கபடி போட்டியும் நடைபெற்றது.
சான்றிதழ்கள்
தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் பிரபுசங்கர் வழங்கினார். பின்னர் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்ட அனைத்து மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகளுடன் குழுப்புகைப்படம் எடுத்துக் கொண்டார்.