இல்லம் தேடி கல்வி மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் திருப்பத்தூர் மாவட்டம் சாதனை
இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் திருப்பத்தூர் மாவட்டம் சாதனை படைத்துள்ளதாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஜவகர் கூறினார்.
திருப்பத்தூர்
இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் திருப்பத்தூர் மாவட்டம் சாதனை படைத்துள்ளதாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஜவகர் கூறினார்.
சாதனை மலர்
தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று ஓராணண்டு நிறைவடைந்ததையடுத்து மாவட்டத்தில் அரசுத்துறைகளின் சார்பாக கடந்த ஒரு வருடத்தில் செயல்படுத்தப்பட்ட நலத்திட்ட விவரங்களை தொகுத்து செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் ‘‘ஓயா உழைப்பின் ஓராண்டு - கடைக்கோடித் தமிழரின் கனவுகளைத் தாங்கி நிறைவான வளர்ச்சியில் நிலையான பயணம் திராவிட மாடல் வளர்ச்சி.. திசையெட்டும் மகிழ்ச்சி’’ என்ற தலைப்பில் ஓராண்டு சாதனை மலர் தயாரிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அரசு கூடுதல் தலைமைச் செயலாளரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான டி.எஸ்.ஜவஹர், மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா முன்னிலையில் வெளியிட்டார்.
அதைத்தொடர்ந்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டி.எஸ்.ஜவகர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கட்டிடம் ரூ.110 கோடி மதிப்பீட்டில் 3 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டு வருகிறது. கட்டுமான பணிகள் விரைந்து முடிக்கப்பட உள்ளது. இந்த கட்டிடத்தில் அனைத்து துறை சார்ந்த 700 அரசு அலுவலர்கள் அமரும் அளவிற்கு வசதிகள் உள்ளது. வருகின்ற ஜூலை மாத இறுதிக்குள் கட்டிடப் பணிகள் முடிவடையும்.
நலத்திட்ட உதவிகள்
மாவட்டத்தில் உங்கள் தொகுதி முதல்-அமைச்சர் திட்டம், முதல்-அமைச்சரின் முகவரி திட்டம் ஆகியவற்றின்கீழ் 2,218 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு 1,741 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.1.48 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளன.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 70 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு மாநிலத்திலேயே அதிக அளவில் 3,723 மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது.
‘இல்லம் தேடி கல்வி திட்டம்’ மூலம் தமிழ்நாட்டிலேயே திருப்பத்தூர் மாவட்டம், முதல் மாவட்டமாக உள்ளது. 50 ஆயிரம் மாணவ- மாணவிகள் இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனர்.
கொரானாவினால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் 1004 குடும்ப நபர்களுக்கு ரூ.5 கோடி நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்தில் 80 சதவீத மக்கள் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தை செயல்படுத்தியதில் தமிழ்நாட்டிலேயே நமது மாவட்டம் முதல் மாவட்டமாக இடம்பெற்றுள்ளது.
அனைத்து வங்கிகளின் சார்பில் நடைபெற்ற 2 கல்விக்கடன் முகாம் 200 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.5 கோடி மதிப்பில் கல்வி கடன் வழங்கப்பட்டுள்ளது. ரூ.27 கோடி தொழிற்கடன் வழங்கப்பட்டுள்ளது. விவசாய கடன் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கி.பாலகிருஷ்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் இ.வளர்மதி, ஊரக வளாச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சங்கரலிங்கம் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.