ஆன்லைனில் மோசடி செய்யப்பட்ட ரூ.55 லட்சம் மீட்பு
ஆன்லைனில் மோசடி செய்யப்பட்ட ரூ.55 லட்சம் மீட்கப்பட்டு உள்ளது. உரியவரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
சிவகங்கை,
ஆன்லைனில் மோசடி செய்யப்பட்ட ரூ.55 லட்சம் மீட்கப்பட்டு உள்ளது. உரியவரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
ஆன்லைனில் பணமோசடி
சிவகங்கை மாவட்டத்தில் ஆன்லைன் மூலமாக வங்கிகளில் இருந்து பணம் எடுப்பதை கட்டுப்படுத்தவும் போலீசில் சைபர் கிரைம் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இந்த பிரிவில் ஆன்லைன் பரிவர்த்தனையில் வங்கி கணக்கில் இருந்து பணத்தை இழப்பவர்கள் கொடுக்கும் புகாரில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆன்லைன் மூலமாக வங்கி கணக்கில் இருந்து பணத்தை பறிகொடுத்த அவர்கள் உடனடியாக சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தால் அவர்கள் உடனடியாக பணம் எடுத்தவரின் யுபிஐ நம்பர் மூலம் அவரது வங்கி கணக்கை கண்டுபிடித்து விடுவார்கள். பின்னர் சம்பந்தப்பட்ட வங்கிக்கு தகவல் கொடுத்து அந்த பணத்தை உடனடியாக நிறுத்திவைத்து பணம் இழந்தவரின் வங்கி கணக்குக்கு திரும்ப அனுப்ப நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இதில் இதுவரை 4 பேர் வரை பணத்தை திரும்பப் பெற்றுள்ளனர்.இந்நிலையில் சில வங்கிகளில் இதுபோல் பணத்தை திரும்ப அனுப்புவதற்கு கோர்ட்டு உத்தரவு வேண்டும் என்று கேட்கின்றனர். இதனால் அந்த பணம் வங்கிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ரூ.55 லட்சம்
சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் இதுபோல் பணத்தை இழந்த சுமார் 40 பேருக்கு சொந்தமான ரூ.55 லட்சம் வங்கிகளில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் தான் இந்த அளவிற்கு அதிகமான தொகை மீட்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் சைபர் கிரைமில் புகார் கொடுத்த சுமார் 40 பேர்கள் இழந்த ரூ.55 லட்சம் வரை வங்கிகளில் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த தொகையை பாதிக்கப்பட்ட நபரின் வங்கி கணக்கிற்கு திரும்ப அனுப்புவதற்காக நீதிமன்றத்தில் அனுமதி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.