பனை நுங்கு விற்பனை அமோகம்

திருமருகல் பகுதியில் பனை நுங்கு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

Update: 2022-05-07 18:30 GMT
திட்டச்சேரி:
திருமருகல் பகுதிகளில் பனை நுங்கு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
பனை நுங்கு 
தமிழகத்தின் மாநில மரமாக பனை மரம் விளங்குகிறது. கடும் வறட்சியான நிலப்பரப்பிலும் செழுமையாக வளரும் பனை மரத்தின் அனைத்து பொருட்களும் பல்வேறு வகைகளில் மக்களுக்கு பயன் தருகின்றன. உடலின் கனிமச்சத்து மற்றும் சர்க்கரையின் அளவை சீராக வைத்து, சுறுசுறுப்புடன் செயல்படுவதற்கு நுங்கு பெரிதும் உதவியாக உள்ளது.
அதுமட்டுமின்றி வைட்டமின் பி, இரும்புச்சத்து, கால்சியம், ஜிங்க், பொட்டாசியம் போன்ற பல்வேறு சத்துக்களும் உள்ளன. நுங்கில் அதிக அளவில் நீர் சத்து உள்ளது. மேலும் உடல் வெப்பத்தை தணிக்கும் ஆற்றல் உடையது.
விற்பனை அமோகம்
 திருமருகல் பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. வெயிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்கள் பாதுகாக்க உடலுக்கு குளிர்ச்சி தரும் நுங்கை ஆர்வமுடன் வாங்கி சாப்பிடுகின்றனர். இதனால் திருமருகல் பகுதியில் பனை நுங்கு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
திட்டச்சேரி, பனங்குடி, கங்களாஞ்சேரி, வடகரை, ஆலத்தூர், அண்ணாமண்டபம், ஏனங்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பனை நுங்கு கொண்டு வரப்பட்டு திருமருகல் பகுதியில் பல்வேறு இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது. 3 நுங்கு ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.பொதுமக்கள் ஆர்வமுடன் நுங்கை  வாங்கி சாப்பிடுகின்றனர்.

மேலும் செய்திகள்