அங்கன்வாடி மையத்திற்குள் அதிகாரிகளை பூட்டிய அமைப்பாளர் பணியிடை நீக்கம் கலெக்டர் நடவடிக்கை

அங்கன்வாடி மையத்திற்குள் அதிகாரிகளை பூட்டிய அமைப்பாளர் பணியிடை நீக்கம் கலெக்டர் நடவடிக்கை

Update: 2022-05-07 17:02 GMT
நாமக்கல்:
நாமக்கல் அருகே அங்கன்வாடி மையத்திற்குள் வைத்து குழந்தைகள் மற்றும் அதிகாரிகளை பூட்டிய அமைப்பாளரை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் ஸ்ரேயா சிங் நடவடிக்கை எடுத்துள்ளார்.
அங்கன்வாடி மையத்திற்கு பூட்டு
நாமக்கல் அருகே உள்ள லக்கம்பாளையம் பகுதியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் 20 குழந்தைகள் படித்து வருகின்றனர். இங்கு அமைப்பாளராக சசிகலா என்பவர் பணியாற்றி வந்தார். அங்கு உதவியாளர் பணியிடம் சில ஆண்டுகளாக காலியாக உள்ளது.
இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி இந்த அங்கன்வாடி மையத்திற்கு வட்டார குழந்தைகள் வளர்ச்சி அலுவலர் வித்யா லட்சுமி மற்றும் மேற்பார்வையாளர் ஆகியோர் ஆய்வுக்கு வந்தனர். அப்போது அவர்களிடம் அமைப்பாளர் சசிகலா அங்கன்வாடி மையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பெற்றோர் குழந்தைகளை அனுப்ப மறுத்து வருவதாக கூறினார். பின்னர் திடீரென அதிகாரிகளையும், 10-க்கும் மேற்பட்ட குழந்தைகளையும் அங்கன்வாடி மையத்தில் வைத்து அமைப்பாளர் சசிகலா, பொதுமக்களுடன் இணைந்து பூட்டி விட்டதாக கூறப்படுகிறது.
அமைப்பாளர் பணியிடை நீக்கம்
இதுகுறித்து தகவல் அறிந்ததும் அங்கு வந்த மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பரிமளா தேவி, அரசு அலுவலர்கள் மற்றும் குழந்தைகளை மீட்டார். பின்னர் அவர் இதுகுறித்து மாவட்ட கலெக்டருக்கு விளக்கம் அளித்து அறிக்கை சமர்ப்பித்தார்.
அவரது அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங், அங்கன்வாடி அமைப்பாளர் சசிகலாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளார்.

மேலும் செய்திகள்