பா.ஜனதா ஆட்சியில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு - மந்திரி ஸ்ரீராமுலு தகவல்

பா.ஜனதா ஆட்சியில் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினருக்கு பா.ஜனதா அரசு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி உள்ளது என போக்குவரத்து துறை மந்திரி ஸ்ரீராமுலு தெரிவித்தார்.

Update: 2022-05-07 15:59 GMT
சிக்கமகளூரு:

கோவில் கும்பாபிஷேகம்

  சித்ரதுர்கா மாவட்டம் நாயக்கனஹட்டி அருகே ஒய்யப்பனஹட்டி கிராமத்தில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது அந்த கோவிலுக்கு போக்குவரத்து துறை மந்திரி ஸ்ரீராமுலு வருகை தந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

  பா.ஜனதா அரசு அனைவருக்கும் பாரபட்சமின்றி இடஒதுக்கீடு செய்து வருகிறது. யாருடைய சிபாரிசுகளையும் ஏற்காமல் முறையாக ஒதுக்கீடு வழங்குகிறது. எஸ்.சி. மற்றும் எஸ்.டி. (ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்) பிரிவினருக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி உள்ளது.

  அவர்களுக்கு அனைத்து அரசு வேலை வாய்ப்புகளிலும் இந்த ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படுகிறது. நாயக்கனஹட்டி பகுதியில் குடிநீர் தேவைக்கு அத்தியாவசியமாக இருக்கும் பத்ரகால்வாய் மற்றும் துங்கபத்ரா கால்வாய் திட்டங்கள் அடுத்த ஆண்டுக்குள் (2023) முடிவடையும்.
  இவ்வாறு அவர் கூறினார்.

50 ஆண்டுகள் பழமையான...

  முன்னதாக உல்லஹள்ளி கிராமத்தில் நடைபெற்ற கிரிக்கெட் விளையாட்டு போட்டியை மந்திரி ஸ்ரீராமுலு தொடங்கி வைத்தார். அப்போது அவரிடம் அந்த பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்தனர் அதில் ஒய்யப்பனஹட்டி பகுதியில் இருந்து நாயக்கனஹட்டிக்கு செல்லும் சாலையில் மிகவும் பழமையான பாலம் உள்ளது.

  50 ஆண்டுகள் பழமையான இந்த பாலம் தற்போது சிதிலமடைந்துள்ளது. அந்த பாலத்தை அகற்றிவிட்டு புதிதாக பாலம் கட்டி தர வேண்டும் என கூறப்பட்டிருந்தது. அந்த மனுவை பெற்று கொண்ட மந்திரி புதிய பாலம் கட்ட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

மேலும் செய்திகள்