தூத்துக்குடி மாநகராட்சியில் மரக்கன்று நடும் விழா; கலெக்டர் தொடங்கி வைத்தார்
தூத்துக்குடியில் தமிழக அரசின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா மற்றும் சாதனை நூல் வெளியீட்டு விழா நடந்தது.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் தமிழக அரசின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா மற்றும் சாதனை நூல் வெளியீட்டு விழா நடந்தது.
மரக்கன்று நடும் விழா
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநகராட்சிகளில், 100 இடங்களில் நகர்ப்புற அடர்காடு வளர்ப்பு முறையில் மரக்கன்றுகள் நடவு செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
அதன் அடிப்படையில் நேற்று தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட திரவிய ரத்தின நகர் பகுதியில் நகர்ப்புற அடர்காடு வளர்ப்பு முறையில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. விழாவுக்கு மாநகராட்சி மேயர் என்.பி.ஜெகன்பெரியசாமி தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ முன்னிலை வகித்தார்.
கலெக்டர் செந்தில்ராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு விழாவை தொடங்கி வைத்தார்.
அதை தொடர்ந்து அப்பகுதியில் இலுப்பை, அரசு, வாதுமை, மா, மருது, நீர்மருது, பூவரசு, புங்கை, புளி, பென்சில், நாவல், தான்ட்ரிக்காய், ஏழு இலைப்பாழை, வேம்பு, கார்டியா என 16 வகையான 365 நாட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது.
புத்தகம் வெளியீடு
பின்னர் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் வெளியிடப்பட்ட, தமிழக அரசின் ஓராண்டு சாதனை குறித்த, கடைக்கோடி தமிழரின் கனவுகளை தாங்கி நிறைவான வளர்ச்சியில் நிலையான பயணம் திராவிட மாடல் வளர்ச்சி திசையெட்டும் மகிழ்ச்சி என்ற புத்தகத்தினை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டார். அதை மாநகராட்சி மேயர் என்.பி.ஜெகன்பெரியசாமி பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் சிவசுப்பிரமணியன், துணை மேயர் ஜெனிட்டா, தூத்துக்குடி தாசில்தார் செல்வக்குமார், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெகவீர பாண்டியன் மற்றும் மாநகராட்சி உறுப்பினர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.