மத்திய அரசின் நலத்திட்டங்களை, விவசாயிகளுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் -மந்திரி ஷோபா பேச்சு
மத்திய அரசின் நலத்திட்டங்களை, விவசாயிகளுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என மத்திய மந்திரி ஷோபா கூறினார்.
சிக்கமகளூரு:
கருப்பு பட்டியலில்...
சிக்கமகளூரு மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் நேற்று முன்தினம் மத்திய அரசின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்திற்கு மத்திய மந்திரி ஷோபா தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
சிக்கமகளூரு நகரில் பாதாள சாக்கடை சீரமைப்பு பணிகளில் 5 பேர் மட்டும் ஈடுபட்டனர். அவ்வாறு இருந்தால் பணிகள் விரைவில் முடிவடையாது. எனவே பாதாள சாக்கடை டெண்டர் எடுத்தவர்களை கருப்பு பட்டியலில் சேர்த்து அவர்கள் மீது வழக்கு தொடர வேண்டும்.
மத்திய அரசின் அமிர்தசரஸ் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள 75 குளங்களில் தண்ணீர் நிரப்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு மற்றும் ராஜீவ்காந்தி வேலைவாய்ப்பு திட்டங்களின் கீழ் பொதுமக்களுக்கு அனைத்து துறை சார்ந்த நலத்திட்டங்களை கொண்டு சேர்க்க வேண்டும்.
நலத்திட்ட உதவிகள்
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிவறைகள் இல்லாத பள்ளிகளை கண்டறிந்து, உடனடியாக கழிவறைகள் அமைத்து கொடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை மத்திய அரசு செய்து வருகிறது. அவற்றை விவசாயிகளுக்கு நேரடியாக கொண்டு சேர்க்க வேண்டும். அவர்கள் விவசாய துறை அதிகாரிகளிடம் தேவையான உதவிகளை கேட்டு பெற்று கொள்ளவேண்டும்.
மத்திய அரசு கிசான் சம்மன் திட்டத்தின் கீழ் அதற்கான தனிப்பட்ட செல்போன் செயலியை பயன்படுத்தி கொண்டு விவசாயிகள் தரமான விளைச்சல் செய்து அதற்கான ஆதரவு விலையை பெற்று கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தின்போது மாவட்ட கலெக்டர் ரமேஷ், மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரி பிரபு, போலீஸ் சூப்பிரண்டு அக்க்ஷய் மச்சீந்திரா ஆகியோர் உடன் இருந்தனர்.
மலர்தூவி மரியாதை
முன்னதாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆதிசங்கராச்சாரியார் ெஜயந்தி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவரது உருவப்படத்திற்கு மத்திய மந்திரி சோபா மலர் தூவி மரியாதை செலுத்திவிட்டு பேசியதாவது:-
ஆதிசங்கராச்சாரியார் ஜெயந்தி விழா கொண்டாடியது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் 1,200 ஆண்டுகளுக்கு முன்பே சாதி,மத பேதமின்றி நாட்டுப்பற்றுடன் செயல்பட்டு பல்வேறு தியாகங்களை செய்தார்.
இவ்வாறு அவர் பேசினார்.