பாம்பன் பாலத்தில் கார் மோதியதில் ஒருவர் பலி

பாம்பன் ரோடு பாலத்தில் கார்-மோட்டார் சைக்கிள் மோதி விபத்தில் சிக்கின. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் பலியானார். அவருடன் வந்தவர் கடலில் தூக்கி வீசப்பட்ட நிலையில், கயிறு மூலம் மீட்கப்பட்டார்.

Update: 2022-05-07 15:18 GMT
ராமேசுவரம், 
பாம்பன் ரோடு பாலத்தில் கார்-மோட்டார் சைக்கிள் மோதி விபத்தில் சிக்கின. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் பலியானார். அவருடன் வந்தவர் கடலில் தூக்கி வீசப்பட்ட நிலையில், கயிறு மூலம் மீட்கப்பட்டார்.
கோவிலுக்கு வந்தவர்கள்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அமராவதி புதூர் பகுதியை சேர்ந்தவர், கருணாமூர்த்தி. இவர் தனது குடும்பத்தினருடன் ராமேசுவரம் கோவிலுக்கு காரில் வந்திருந்தார். தரிசனம் செய்துவிட்டு நேற்று காலை ஊருக்கு புறப்பட்டனர். காரை கருணாமூர்த்தி ஓட்டினார். 
கடல் நடுவே உள்ள பாம்பன் ரோடு பாலத்தில் அந்த கார் சென்ற போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது கார் எதிர்பாராதவிதமாக மோதிவிட்டு, பாலத்தின் நடைபாதையில் ஏறி மின் கம்பத்திலும் மோதி நின்றது. 
கார் மோதியதால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரில் ஒருவர் கடலில் தூக்கி வீசப்பட்டார். மற்றொருவர் ரோடு பாலத்தின் நடை பாதையில் விழுந்து படுகாயம் அடைந்தார்.
கயிறு மூலம் மீட்பு
உடனே அந்த வழியாக சென்றவர்கள் பதறியபடி அங்கு ஓடிவந்து பார்த்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் பாம்பன் போலீசாரும், மீனவர்கள் உள்பட ஏராளமானவர்களும் அங்கு கூடினார்கள். 
கடலில் தூக்கி வீசப்பட்டவர் தத்தளித்தபடி கிடந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் உடன் எடுத்து வந்த கயிறு கிடந்தது. அதை எடுத்து அவரை நோக்கி போலீசார் வீசி, நாட்டுப்படகு மீனவர்கள் உதவியுடன் மீட்டனர். 
அந்த நபரையும், பாலத்தின் மேல் காயம் அடைந்து கிடந்தவரையும் உடனடியாக சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
பின்னர் நடத்திய விசாரணையில், கடலில் விழுந்தவர் மண்டபம் சேது நகரை சேர்ந்த முகேஷ் (வயது 22) என்பதும், அவருடன் வந்த மற்றொருவர் நாராயணன் (58) என்பதும் தெரியவந்தது. இதில் நாராயணன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இவர்கள் இருவரும் பாம்பன் பகுதியில் விசைப்படகுகளை பழுதுபார்ப்பதற்காக வந்த தொழிலாளர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
உயிர் தப்பினர்
அதே நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது மோதிய காரில் 4 பெண்கள், 2 குழந்தைகள் உள்ளிட்ட 8 பேர் இருந்தனர். அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து பாம்பன் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த கருணாமூர்த்தியை கைது செய்தனர். 
இதுதொடர்பாக போலீசார் கூறும் போது, “மோட்டார் சைக்கிளில் மோதிய கார் அதிர்ஷ்டவசமாக பாலத்தின் நடைமேடையில் ஏறி, மின்கம்பத்தில் மோதி நின்றுவிட்டது. ஒருவேளை தறிகெட்டு ஓடி தடுப்புச்சுவரை தாண்டி இருந்தால் நிலைமை விபரீதமாக இருக்கக்கூடும். பாம்பன் பாலத்தில் வருகிறவர்கள் கடலை ரசிக்க வேண்டும் என்பதற்காக கவனக்குறைவாக வாகனங்களை இயக்கி விபத்தில் சிக்குகிறார்கள். எனவே பாம்பன் பாலத்தில் வாகனம் ஓட்டும் போது கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்” என்று கூறினர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்