ஓராண்டில் ரூ.2,411 கோடியில் வளர்ச்சி பணிகள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஓராண்டில் ரூ.2,411 கோடியில் வளர்ச்சி பணிகள் நடைபெற்றுள்ளதாக கலெக்டர் ஸ்ரீதர் கூறினார்.

Update: 2022-05-07 15:17 GMT
கள்ளக்குறிச்சி: 

தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்த ஓராண்டில் அரசின் அரும்பணிகளின் அணிவகுப்பு என்ற தலைப்பில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் தயாரிக்கப்பட்ட ஓராண்டு சாதனை மலர் புத்தகம் வெளியிடும் நிகழ்ச்சி கள்ளக்குறிச்சி மாவட்ட அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. 
நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கி, ஓராண்டு சாதனை மலர் புத்தகத்தை வெளியிட்டார். அதனை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மணி பெற்றுக்கொண்டார். அவருடன் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சரவணன் ஆகியோர் இருந்தனர். 
அப்போது கலெக்டர் ஸ்ரீதர் நிருபர்களிடம் கூறியதாவது:- 

வளர்ச்சி பணிகள் 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் அனைத்து துறைகள் சார்பில் ரூ.2,411 கோடியே 16 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள் நடைபெற்றுள்ளது. ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறையின் சார்பில் ரூ.851 கோடியே 14 லட்சத்தில் வளர்ச்சி பணிகளும், ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் 84,370 மகளிர் சுய உதவி குழுக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ரூ.494 கோடியே 52 லட்சம் வங்கி மூலம் கடனும், அனைத்து வங்கிகளின் சார்பில் கல்விக்கடன், விவசாய தொழிற்கடன், தாட்கோ கடன், சிறு, குறு தொழிற்கடன் மற்றும் இதர வளர்ச்சிப் பணிகளுக்கான கடன்கள் 9,236 பயனாளிகளுக்கு ரூ.630 கோடியே 72 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளது. 

நகைக்கடன் தள்ளுபடி 

மேலும் முதல்வரின் முகவரி என்ற துறையின் வாயிலாக 22,562 கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அரசு நகர பஸ்களில் கட்டணமில்லா பயண திட்டத்தின்கீழ் 1 கோடியே 20 லட்சத்து 63 ஆயிரத்து 550 பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர். கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகை தள்ளபடி திட்டத்தின்கீழ் 21,716 பயனாளிகளுக்கு ரூ.96.36 கோடி நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் 8 லட்சத்து 54 ஆயிரம் பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, 1 லட்சத்து 2 ஆயிரம் பேருக்கு 84 வகையான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. விபத்தில் பாதிக்கப்பட்ட 1,321 பேருக்கு இன்னுயிர் காப்போம் திட்டத்தின்கீழ் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 4 லட்சத்து 10 ஆயிரத்து 480 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4 ஆயிரம் வீதம் ரூ.164.19 கோடி நிதியுதவியும், 14 வகையான மளிகை தொகுப்பு ரூ.16.93 கோடி மதிப்பீட்டிலும் வழங்கப்பட்டுள்ளது. பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தின்கீழ் 4 லட்சத்து 23 ஆயிரத்து 528 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற்றுள்ளனர்.

ஊட்டச்சத்து பெட்டகம் 

முன்கள பணியாளர்களுக்கு கொரோனா பெருந்தொற்று ஊக்கத்தொகையாக ரூ.1 கோடியே 72 லட்சத்து 20 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டத்தின்கீழ் 27 முகாம்கள் மூலம் 1,200 பேர் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர். விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின்கீழ் ரூ.6 கோடியே 86 லட்சத்து 71 ஆயிரத்து 680 செலவில் 1,232 விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை மூலம் 238.38 கி.மீ சாலை பணிகள் ரூ.119.05 கோடி மதிப்பீட்டிலும், 2 பாலம் கட்டும் பணிகள் ரூ.2.47 கோடி மதிப்பீட்டிலும் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு மாவட்ட கலெக்டரின் தன்விருப்ப நிதியின் மூலம் இணை ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது. 

இடைநின்ற 650 மாணவர்கள் 

கொரோனா காலத்தில் இடைநின்ற 650 மாணவ-மாணவிகளை மீண்டும் பள்ளியில் சேர்த்து, அவர்கள் படிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உளுந்தூர்பேட்டையில் இருந்து தலைவாசல் வரை தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்தை தடுக்க போல்லார்ட்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. தமிழக அரசின் திட்ட பணிகள், நலத்திட்டங்கள் பொதுமக்களுக்கு கிடைத்திட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்