கார் மோதி பேராசிரியர் பலி; மகன் படுகாயம்

துறையூர் அருகே சாலையை கடக்க முயன்றபோது, கார் மோதி பேராசிரியர் பலியானார். அவரது மகன் படுகாயம் அடைந்தார்.

Update: 2022-05-07 15:05 GMT
துறையூர், மே.8-
துறையூர் அருகே சாலையை கடக்க முயன்றபோது, கார் மோதி பேராசிரியர் பலியானார். அவரது மகன் படுகாயம் அடைந்தார்.
பேராசிரியர்
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள காமாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 42). மாற்றுத்திறனாளியான இவர் நாமக்கல்லில் உள்ள அரசு அறிஞர் அண்ணா கலை அறிவியல் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார்.
நேற்று முன்தினம் பாலமுருகனும், அவரது மகன் சங்கமேசும் (9) நாமக்கல்லில் இருந்து தனியார் பஸ்சில் காமாட்சிபுரத்துக்கு வந்தனர். பின்னர் காமாட்சிபுரம் பஸ் நிறுத்தத்தில் இறங்கி வீட்டுக்கு செல்வதற்காக சாலையை கடக்க முயன்றுள்ளனர். அப்போது, அந்த வழியாக வந்த கார் ஒன்று அவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் இருவரும் படுகாயம் அடைந்து சாலையில் கிடந்தனர்.
சாவு
இந்த விபத்தை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இருவரும் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு, பாலமுருகன் சிகிச்சை பலன் இன்றி நேற்று பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த சங்கமேஷ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான்.
இந்த விபத்து தொடர்பாக துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு சென்ற காரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்