கர்நாடக மந்திரிசபை 3 நாட்களில் மாற்றியமைப்பு; முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா பேட்டி

3 நாட்களில் மந்திரிசபை மாற்றியமைக்கப்படும் என்று முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

Update: 2022-05-07 14:50 GMT
பெங்களூரு;

  பெங்களூருவில்  முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

மந்திரிசபை மாற்றியமைப்பு

  மந்திரிசபை விரிவாக்கம் மற்றும் மந்திரிசபையை மாற்றியமைப்பது குறித்து பா.ஜனதா மேலிட தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இன்னும் 3 நாட்களில் மாநிலத்தில் மந்திரிசபை மாற்றியமைக்கப்பட உள்ளது. இந்த விவகாரத்தில் பா.ஜனதா மேலிட தலைவர்கள் எடுக்கும் முடிவே இறுதியானது. மேலிட தலைவர்கள் எடுக்கும் எந்த முடிவாக இருந்தாலும், அதற்கு நாங்கள் கட்டுப்பட்டு நடப்போம்.

  மாநிலத்தில் அடுத்த ஆண்டு (2023) நடைபெறும் சட்டசபை தேர்தலில் 150 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் பா.ஜனதா ஆட்சி அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது பிரதமர் மோடியின் கனவாகும். அதன்படி, அடுத்த ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 150 இடங்களில் வெற்றி பெறும். இதற்காக கட்சியை வளர்க்கும் பணிகளில் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

யத்னால் பற்றி பேச மறுப்பு

  கர்நாடகம் முழுவதும் நான் உள்பட பிற தலைவர்கள்
சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். நானும் மைசூரு, மண்டியா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். கட்சியை பலப்படுத்த பிற கட்சிளை சேர்ந்த தலைவர்களும், பா.ஜனதாவுக்கு வருகிறார்கள். மண்டியாவை சேர்ந்த நிறைய தலைவர்கள் பா.ஜனதாவில் சேர்ந்து வருகின்றனர்.
  இவ்வாறு அவர் கூறினார்.

  முதல்-மந்திரி பதவிக்கு ரூ.2,500 கோடி கேட்டதாக யத்னால் எம்.எல்.ஏ. கூறிய குற்றச்சாட்டு குறித்து எடியூரப்பாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். ஆனால் அவர் பதிலளிக்க மறுத்து விட்டார். யத்னால் பேசி இருப்பது குறித்து பா.ஜனதா தலைவர்கள் பார்த்து கொள்வாா்கள். நான் எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை என்று எடியூரப்பா கூறினார்.

மேலும் செய்திகள்