விதானசவுதாவை வியாபார சவுதாவாக மாற்றியதே பா.ஜனதாவின் சாதனை; பிரியங்க் கார்கே எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
விதானசவுதாவை வியாபார சவுதாவாக மாற்றியதே பா.ஜனதாவின் சாதனை என பிரியங்க் கார்கே எம்.எல்.ஏ. குற்றம் சாட்டியுள்ளார்.
பெங்களூரு:
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மந்திரியான பிரியங்க் கார்கே எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவுகளில் கூறி இருப்பதாவது:-
பா.ஜனதா ஊழல் கட்சி என்பதை நிரூபிக்கும் வகையில், ஒவ்வொரு பதவிக்கான விலை பட்டியலை வெளியிட்டுள்ளனர். முதல்-மந்திரி பதவிக்கு ரூ.2,500 கோடி பேரம் நடந்துள்ளது. மந்திரி பதவி என்றால் ரூ.50 கோடி முதல் ரூ.70 கோடி வரை கொடுக்க வேண்டும். சப்-இன்ஸ்பெக்டர் ஆக வேண்டும் என்றால் ரூ.80 லட்சம் வரை கொடுக்க வேண்டும். அரசு பணிகளை ஒப்பந்த அடிப்படையில் எடுத்து செய்தால், ஒப்பந்ததாரர்கள் 40 சதவீத கமிஷன் வழங்க வேண்டும். மடங்களில் இருந்து 30 சதவீத கமிஷன் என்று நிர்ணயித்துள்ளனர். முதல்-மந்திரி பதவிக்கு ரூ.2,500 கோடி கேட்டதாக காங்கிரஸ் கூறவில்லை, பா.ஜனதா கட்சியை சேர்ந்த யத்னால் எம்.எல்.ஏ.வே சொல்லி இருக்கிறார்.
ஒப்பந்ததாரர்களிடம் 40 சதவீத கமிஷன் கேட்பதாக, ஒப்பந்ததாரர்கள் சங்க தலைவரே பிரதமர் அலுவலகத்திற்கு கடிதம் எழுதி வைத்திருக்கிறார். இதற்கு சாட்சி ஒப்பந்ததாரர் சந்தோஷ் பட்டீல் தற்கொலை ஆகும். அவரது தற்கொலையால் மந்திரி பதவியை ஈசுவரப்பா ராஜினாமா செய்திருக்கிறார். பா.ஜனதா ஆட்சியில் ஊழல் நடைபெறுவது குறித்து மாநில மக்கள் பெரிதாக பேசி வருகின்றனர். விதானசவுதாவை, வியாபார சவுதாவாக மாற்றியதே பா.ஜனதாவின் சாதனை.
இவ்வாறு பிரியங்க் கார்கே கூறியுள்ளார்.