அடக்கம் செய்வதில் பிரச்சினை: கோர்ட்டு உத்தரவுப்படி மூதாட்டி உடல் மகளிடம் ஒப்படைப்பு

நாகர்கோவில் அருகே மூதாட்டி உடலை அடக்கம் செய்வதில் பிரச்சினை ஏற்பட்டதை தொடர்ந்து கோர்ட்டு உத்தரவுப்படி மூதாட்டி உடல் மகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

Update: 2022-05-07 14:43 GMT
நாகர்கோவில், 
நாகர்கோவில் அருகே மூதாட்டி உடலை அடக்கம் செய்வதில் பிரச்சினை ஏற்பட்டதை தொடர்ந்து கோர்ட்டு உத்தரவுப்படி மூதாட்டி உடல் மகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
மூதாட்டி சாவு
நாகர்கோவில் என்.ஜி.ஓ. காலனி அருகே உள்ள மேலக்காட்டு விளையை சேர்ந்தவர் குருசாமி. இவருடைய மனைவி பாஞ்சாலி (வயது 77). இவர்களுக்கு ராஜப்பா என்ற மகனும், உமா மகேஸ்வரி என்ற மகளும் உள்ளனர். கடந்த 2017-ம் ஆண்டு குருசாமி இறந்து விட்டார். அதன்பிறகு பாஞ்சாலி என்.ஜி.ஓ. காலனி அருகே பிள்ளையார்புரத்தில் உள்ள தன்னுடைய மகளான உமா மகேஸ்வரி வீட்டில் வசித்தார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஞ்சாலி இறந்தார். இதை அறிந்த ராஜப்பா, தனது தாயார் சாவில் சந்தேகம் இருப்பதாக சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதை தொடர்ந்து சுசீந்திரம் போலீசார் பாஞ்சாலி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உடல் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.
கோர்ட்டு உத்தரவு
இதற்கிடையே பாஞ்சாலியின் உடலை அடக்கம் செய்வது தொடர்பாக ராஜப்பாவுக்கும், உமா மகேஸ்வரிக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. தாய் பாஞ்சாலியின் உடலை தங்களிடம் ஒப்படைக்குமாறு ராஜப்பா மற்றும் உமா மகேஸ்வரி ஆகியோர் தனித்தனியாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்தனர். இருதரப்பினரும் திரண்டு வந்து மனு கொடுத்ததால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
இந்த சூழ்நிலையில் ராஜப்பா, மதுரை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், "எனது தாயார் பாஞ்சாலி உடலை, சொந்த ஊரில் எனது தந்தை உடலை அடக்கம் செய்ததற்கு அருகில் அடக்கம் செய்ய அனுமதித்து உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, பாஞ்சாலியை அவரது மகள் உமா மகேஸ்வரி கடந்த 7 ஆண்டுகளாக பராமரித்து வந்ததால் அவரின் விருப்பப்படி பிள்ளையார்புரத்தில் பாஞ்சாலியின் உடலை அடக்கம் செய்ய அனுமதி அளித்து உத்தரவிட்டது.
போலீஸ் குவிப்பு
இதனையடுத்து ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்த பாஞ்சாலியின் உடலை வாங்குவதற்காக அவருடைய மகள் உமா மகேஸ்வரியும், மருமகனும் நேற்று வந்தனர். பின்னர் பாஞ்சாலியின் உடல் கோர்ட்டு உத்தரவுப்படி உமா மகேஸ்வரியிடம் ஒப்படைக்கப்பட்டது. உடலை பெற்றுக் கொண்ட உறவினர்கள் ஆம்புலன்ஸ் மூலமாக பிள்ளையார்புரத்துக்கு கொண்டு சென்று நல்லடக்கம் செய்தனர்.
இறுதி சடங்கில் மகன் கலந்து கொண்டு முறைப்படி காரியத்தை செய்யலாம் என கோர்ட்டு உத்தரவிடப்பட்டிருந்தது. எனினும் இந்த இறுதி சடங்கு நிகழ்ச்சியில் மகன் பங்கேற்கவில்லை.
முன்னதாக உடலை ஒப்படைப்பதில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கபிரியேல், ஆறுமுகம் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பிணவறை முன்பும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் பாஞ்சாலியின் உடலை நல்லடக்கம் செய்த பிள்ளையார்புரத்திலும் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

மேலும் செய்திகள்