தெப்பக்காடு-மசினகுடி சாலையை கடந்த புலி

தெப்பக்காடு-மசினகுடி சாலையை கடந்த புலி

Update: 2022-05-07 14:15 GMT
கூடலூர்

முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டுயானைகள், புலிகள், மான்கள், காட்டெருமைகள், செந்நாய்கள், சிறுத்தைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. கடந்த மாதம் வரை கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், வறட்சி ஏற்பட்டு வனவிலங்குகள் இடம்பெயர்ந்து சென்றன. தற்போது மாலை நேரத்தில் சூறாவளி காற்றுடன் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் முதுமலையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. 

இந்த நிலையில் நேற்று முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தெப்பக்காட்டில் இருந்து மசினகுடிக்கு செல்லும் சாலையில் சுற்றுலா பயணிகள் சிலர் காரில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது புலி ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் சாலையை கடந்து சென்றது. இதனால் சுற்றுலா பயணிகள் பீதி அடைந்தனர். மேலும் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, கோடை சீசனை அனுபவிக்க நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் முதுமலை சாலைகளில் தங்களது வாகனங்களை அதிவேகமாக இயக்கக்கூடாது. வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்தி வைக்கக்கூடாது. இதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

மேலும் செய்திகள்