நண்பர்களுடன் குளித்த போது கிணற்றில் மூழ்கி பிளஸ்-1 மாணவன் சாவு
நண்பர்களுடன் குளித்த போது, கிணற்றில் உள்ள சேற்றில் சிக்கியதில் நீரில் மூழ்கிய பிளஸ்-1 மாணவன் பலியானான்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள நேமம் மேட்டு தெருவை சேர்ந்தவர் லட்சுமி (வயது 39). இவர் அப்பகுதியில் உள்ள குடிநீர் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். 2-வது மகன் சாரதி (16). இவர் திருமழிசையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் சாரதி அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்களுடன் நேமம் பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் குளிக்கச் சென்றார். கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சாரதி சேற்றில் சிக்கி நீரில் மூழ்கினார்.
இதைத்தொடர்ந்து அவர் உயிருக்கு போராடிய நிலையில், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஒரு மணி நேரம் போராடி சேற்றில் சிக்கிய மாணவன் உடலை மீட்டனர். இதையடுத்து, பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
அதேபோல், திருவள்ளூரை அடுத்த புல்லரம்பாக்கம் ஆசைதம்பி தெருவை சேர்ந்தவர் சரவணன் (27). பூண்டி ஏரி கரையோரம் புல்லரம்பாக்கம் பஸ் நிலையம் பின்புறம் உள்ள குட்டையில் விழுந்து மூழ்கி இறந்து போனார். இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்த புல்லரம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.