பேராசிரியர்களுக்கு பயிற்சி
திருப்பூர் எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கலைக் கல்லூரியில் பேராசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடந்தது.
திருப்பூர்:
தமிழ்நாடு மாநில உயர் கல்வி மன்றம் சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி இப்பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. தமிழகத்தின் 30 மையங்களில், 21 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும், 9 பல்கலைக்கழகங்களும் பயிற்சி மையங்களாக செயல்படுகின்றன.
இப்பயிற்சியில் உயர்கல்வித்தர மேம்பாடு, தொழில்நுட்ப வசதிகளை கற்பித்தலுக்கு பயன்படுத்துதல், கல்லூரிகளுக்கான தேசிய தர அங்கீகாரம் பெறுதல், மென் திறன் மேம்பாடு, ஆராய்ச்சி மேம்பாடு, தொழில் துறையில் எதிர்காலத்தில் ஏற்படும் பணி வாய்ப்புகள் மற்றும் அதற்கேற்ற திறன்கள் குறித்து தகுந்த நிபுணர்களால் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக மண்டலத்தின் கீழ் இயங்கும் திருப்பூர் எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கலைக் கல்லூரியில் ஆங்கிலம் மற்றும் கணினி அறிவியல் துறை சார்ந்த பாடங்களை நடத்தும் 90 பேராசிரியர்களுக்கு பயற்சி வகுப்புகள் நடந்தது. ஆங்கிலத்துறை உதவி பேராசிரியை கீதா வரவேற்றார். கணிதத்துறை பேராசிரியை இந்திராணி முன்னிலை வகித்தார். எல்.ஆர்.ஜி. கல்லூரி முதல்வர் எழிலி தொடங்கி வைத்தார்.