மடத்துக்குளம் அருகே கொழுமத்தில் கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா நடப்பது வழக்கம். திருவிழாவின்போது சுற்றுப்பகுதியில் உள்ள 10 க்கும் மேற்பட்ட கிராம மக்களும், உடுமலை, பொள்ளாச்சி, தாராபுரம், திருப்பூர், பழனி உள்ளிட்ட நகரப்பகுதியில் உள்ள பக்தர்களும் வந்து திருவிழாவில் பங்கேற்பார்கள். தற்போது கோவில் திருவிழா தொடங்கியுள்ளது. இந்த நிலையில் கோவில் பகுதி, ரோடு ஓரங்கள், அமராவதி ஆற்றுப் பாலம் பகுதி, கொமரலிங்கம் ரோடு, பழனி ரோடு உள்ளிட்ட இடங்களில் வரவேற்பு மற்றும் விளம்பரப் பலகைகள் வைத்துள்ளனர். இதனால் இந்த பகுதி விளம்பர பதாகையால் நிரம்பி வழிகிறது.
இந்த நிலையில் கொமரலிங்கம் அமராவதி ஆற்றுப் பாலம் பகுதியில் ரோடு ஓரத்தில் வைத்து இருந்த பிரம்மாண்டமான விளம்பர பதாகை பலமான காற்று வீசியதால் சாய்ந்து விழுந்தது. இரவு நேரம் விழுந்ததால் இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
இது குறித்து கொமரலிங்கம்போலீசார் கூறும்போது பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு இல்லாத வகையில் முழுமையான பாதுகாப்போடு விளம்பர பதாகை அமைக்க வேண்டும். உறுதியான மரங்கள், கயிறுகளால் கட்ட வேண்டும். காற்றில் அவிழ்ந்து விழுதல,் சாய்ந்து விழுதல் கூடாது. மின்கம்பங்கள், மின்வழித்தடங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது. விளம்பர பதாகையால் விபத்து ஏற்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனர்.