போடிப்பட்டி
விவசாய நிலங்களில் பனை விதைகள் நடவு செய்யும் பணிகளை வேளாண்மைத்துறையினர் செயல்படுத்தி வருகின்றனர்.
வேலை வாய்ப்பு
கற்பகத்தரு என்று அழைக்கப்படும் பனை மரங்கள் அடி முதல் நுனி வரை மக்களுக்கு பயன்படுவதாக உள்ளது. நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும், மழை நீரை ஈர்த்து சேமிக்கவும் பனை மரங்கள் உதவுகிறது. கன மழை மற்றும் வெள்ளப்பெருக்கின் போது ஏரிகளின் கரைகள் மற்றும் வயல்களின் வாய்க்கால்களை சேதமடையாமல் பாதுகாப்பது பனை மரங்களாகும். மற்றும் உள்ளூர் கிராம தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கிடவும், பனை பொருட்கள் மூலம் கைவினைக் கலைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கிடவும், மதிப்புக்கூட்டுப் பொருட்களை உற்பத்தி செய்து அந்நிய செலாவணி வருவாயைப் பெருக்கவும் பனை சாகுபடி கைகொடுக்கிறது.எனவே பனை உற்பத்தியைப் பெருக்கும் வகையில் வேளாண்மைத்துறையின் மூலம் பனை மேம்பாட்டு இயக்கத்தில் பனை விதை வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
ஈரப்பதம்
உழவன் செயலி மூலம் பதிவு செய்த விவசாயிகளுக்கு தலா 50 பனை விதைகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.மேலும் விருப்பப்பட்ட ஊராட்சிகளுக்கு குளக்கரைகள் உள்ளிட்ட பகுதிகளில் நடவு செய்யும் வகையில் தலா 200 பனை விதைகள் வழங்கப்பட்டுள்ளது.
மழையைத் தொடர்ந்து மண்ணில் ஈரப்பதம் காணப்படும் நிலையில் பனை விதைகளை நடவு செய்வது சிறந்ததாகும். அதன்படி தற்போது எலையமுத்தூர், வாளவாடி, தளி, கல்லாபுரம், குருவப்ப நாயக்கனூர், மானுப்பட்டி, செல்வபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் பனை விதைகள் நடவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது என்று உடுமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தேவி கூறினார்.