சேலம் மாவட்டத்தில் 182 மையங்களில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 42,982 பேர் எழுதினர்

சேலம் மாவட்டத்தில் நேற்று 182 மையங்களில் நடந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 42 ஆயிரத்து 982 பேர் எழுதினர். தேர்வு மையங்களில் கலெக்டர் கார்மேகம் நேரில் ஆய்வு செய்தார்.

Update: 2022-05-06 23:44 GMT
சேலம்:
சேலம் மாவட்டத்தில் நேற்று 182 மையங்களில் நடந்த  10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 42 ஆயிரத்து 982 பேர் எழுதினர். தேர்வு மையங்களில் கலெக்டர் கார்மேகம் நேரில் ஆய்வு செய்தார்.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு
தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. வருகிற 30-ந் தேதி வரை இந்த தேர்வுகள் நடைபெறுகிறது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 23 ஆயிரத்து 302 மாணவர்களும், 22 ஆயிரத்து 217 மாணவிகளும் என மொத்தம் 45 ஆயிரத்து 519 பேர் 10-ம் வகுப்பு தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கு மாவட்டம் முழுவதும் 182 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்வு தொடங்குவதற்கு முன்பாக பெரும்பாலான மாணவ, மாணவிகள் அவரவர் பள்ளிக்கு ஆர்வமுடன் சென்றனர். பின்னர் அவர்கள் பள்ளி வளாகத்தில் அமர்ந்து தமிழ் மொழி பாடத்தை படித்தனர். பள்ளி வளாகத்தில் கரும்பலகை வைக்கப்பட்டு அதில், மாணவர்களின் பதிவு எண், தேர்வு நடைபெறும் வகுப்பறை போன்ற விவரங்கள் வெள்ளைத்தாளில் எழுதி ஒட்டப்பட்டிருந்தது. அதனை மாணவ, மாணவிகள் பார்த்து தேர்வு எழுதும் அறையை தெரிந்து கொண்டனர்.
அறிவுரைகள்
காலை 9 மணியளவில் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர்கள் சில அறிவுரைகளை வழங்கினர். எவ்வித பதற்றமும் இல்லாமல் தேர்வுகளை எழுதுமாறும் அறிவுறுத்தப்பட்டனர். சரியாக 10 மணிக்கு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு வினாத்தாள்கள் வழங்கப்பட்டது. பின்னர் 10.15 மணிக்கு தேர்வுகள் தொடங்கியது. தேர்வு அறைகளுக்கு செல்வதற்கு முன்பாக கால்குலேட்டர், செல்போன் உள்ளிட்ட பொருட்கள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.
தேர்வில் எவ்வித முறைகேடுகளும் நடைபெறாமல் இருக்க பறக்கும் படையினர் பல்வேறு தேர்வு மையங்களுக்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அனைத்து தேர்வு மையங்கள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 182 மையங்களில் நடந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 42 ஆயிரத்து 982 பேர் எழுதினர். 2 ஆயிரத்து 537 பேர் தேர்வு எழுதவரவில்லை.
கலெக்டர் ஆய்வு
இதனிடையே, சேலம் 4 ரோட்டில் உள்ள சிறுமலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் சர்க்கார் கொல்லப்பட்டி அரசு பள்ளியில் நடந்த எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகளை கலெக்டர் கார்மேகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர், அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குடிநீர், கழிப்பறை போன்ற வசதிகள் குறித்தும், மின்சாரம் தடையின்றி வழங்க உரிய நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் தேர்வு கண்காணிப்பாளரிடம் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன், மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்