வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகைக்கு இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்-கலெக்டர் கார்மேகம் தகவல்
சேலம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகைக்கு இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகைக்கு இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உதவித்தொகை
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் அனைத்துவகை மாற்றுத்திறனாளி இளைஞர்களிடம் இருந்து வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள் தற்போது சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பெறப்படுகின்றன.
10-ம் வகுப்பு தேர்ச்சி, தோல்வி மற்றும் அதற்கும் மேலான கல்வித்தகுதிகளை பெற்றவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, பதிவினை தொடர்ந்து புதுப்பித்து, 5 ஆண்டுகள் நிறைவடைந்த பின்னர் வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு நிறைவடைந்த மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கும் தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகள்
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மேலும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரர்கள் 45 வயதிற்குள்ளும், இதர இனத்தை சேர்ந்தவர்கள் 40 வயதிற்குள்ளும் இருத்தல் வேண்டும். 10-ம் வகுப்பு தோல்வி அடைந்தவர்களுக்கு மாதம் ரூ.200-ம், தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300-ம், மேல்நிலை கல்வி தேர்ச்சிக்கு ரூ.400-ம், பட்டப்படிப்பு தேர்ச்சிக்கு ரூ.600 வழங்கப்படும்.
அதேபோல், மாற்றுத்திறனாளிகளுக்கு 10-ம் வகுப்பு தோல்வி மற்றும் தேர்ச்சிக்கு ரூ.600-ம், மேல்நிலை கல்வி தேர்ச்சிக்கு ரூ.750-ம் மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சிக்கு ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம், விவசாயம், சட்டம் போன்ற தொழிற் பட்டப்படிப்புகள் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பற்ற உதவித்தொகை வழங்கப்பட மாட்டாது.
விண்ணப்ப படிவம்
உதவித்தொகை விண்ணப்ப படிவம் பெற விரும்பும் மனுதாரர்கள் தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டையை ஆதாரமாக காண்பித்து, சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பங்களை அனைத்து அலுவலக வேலை நாட்களிலும் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
அதேசமயம், www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனைத்து அலுவலக வேலை நாட்களிலும் சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கிவரும் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டப்பிரிவில் அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கணக்குப்புத்தகத்துடன் நேரில் வந்து சமர்ப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.