வெல்டிங் பட்டறை தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

வெல்டிங் பட்டறை தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2022-05-06 22:08 GMT
புதுக்கோட்டை:

போக்சோ வழக்கு
புதுக்கோட்டை காந்திநகரை சேர்ந்தவர் சரண்குமார் (வயது 22). இவர் வெல்டிங் பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 2017-ம் ஆண்டு பிளஸ்-1 படித்து வந்த 16 வயது மாணவியை காதலித்து திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறியிருக்கிறார். மேலும் கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் 30-ந் தேதி மாணவியை 5 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரத்துடன் கடத்தி சென்றார்.
இது தொடர்பாக மாணவியின் தந்தை கணேஷ் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் மாணவியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் சரண்குமாரை கைது செய்தனர்.
ஆயுள் தண்டனை
இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சத்யா நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில் மாணவியை கடத்தி சென்றதற்காக சரண்குமாருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும், பாலியல் வன்கொடுமை செய்ததற்கு ஆயுள் தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு அரசு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார். இதையடுத்து சரண்குமார் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

மேலும் செய்திகள்