‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-05-06 21:31 GMT
காற்றுமாசு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே அச்சம்தவிர்த்தான் ஊராட்சியில் குப்பைக்கழிவுகள் ஆற்றங்கரையோரம் குவிக்கப்பட்டு எரிக்கப்படுகிறது. இதனால் இப்பகுதி முழுவதும் காற்று மாசு ஏற்படுவதுடன் துர்நாற்றம் வீசி அவ்வழியே செல்லும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இந்தபகுதியில் குப்பைகளை சேமிக்க குப்பைத்தொட்டி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
முருகன், ஸ்ரீவில்லிபுத்தூர். 

பொதுமக்கள் அவதி

மதுரை மாநகர் அவனியாபுரம் செல்லும் மெயின் ரோடு பகுதியில் உள்ள குப்பைத்தொட்டியில் குப்பைகள் கொட்டப்படாமல் சாலையில் குவிந்து கிடக்கிறது. இதனால் இவ்வழியே நடந்து செல்லும் மக்கள் பெரிதும் அவதிப்படுவதுடன் துர்நாற்றம் வீசி அப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடாக உள்ளது. எனவே சாலைகளில் குப்பைகள் ெகாட்டப்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
மூர்த்தி, மதுரை. 

சுகாதார சீர்கேடு

மதுரை அண்ணா பஸ்நிலையம் முன்பு உள்ள குப்பை தொட்டி அருகே குப்பைகள் அதிக அளவில் தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த பகுதியே சுகாதார சீர்கேடு அடைந்து  ெதாற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. இதனால் இவ்வழியே நடந்து செல்பவர்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அதிகாரிகள் இதனை கவனித்து தேங்கிய குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அன்புமணி, மதிச்சியம்.

தொற்றுநோய் பரவும் அபாயம்

மதுரை ஆனையூா் மல்லிகை நகா் ராக்லாண்ட் தெருவில் பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பு காரணமாக வீடுகளில் இருந்து வரும் கழிவுநீர் ரோட்டில் செல்கிறது. கழிவுநீரில் இருந்து கொசுக்கள் உருவாகி டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே பாதாள சாக்கடையை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
பொதுமக்கள், ஆனையூா். 

நாய்கள் தொல்லை 

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை, தாயில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே செல்வதற்கே பெரிதும் அச்சப்படுகின்றனா். எனவே பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
சக்தி, தாயில்பட்டி. 

மாசடைந்து வரும் வைகை

மதுரை வழியாக ஓடும் வைகை ஆற்றில் கழிவுநீர் அதிக அளவில் கலக்கிறது. மேலும் வைகை கரையில் பிளாஸ்டிக் குப்பைகள் போன்ற மக்காத குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் மழை பெய்தும் நிலத்தடி நீர்மட்டம் உயருவதில்லை. மேலும் சமூக விரோதிகளால் தினமும் தேங்கியுள்ள குப்பைகளை தீயிட்டு கொளுத்தி வருகிறார்கள். இதனால் காற்று மாசும் அதிகரித்து வருகிறது. எனவே மிகுந்த மாசடைந்து வரும் வைகை ஆற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதியராஜா, மதுரை.

மேலும் செய்திகள்