விபத்தில் சிக்கிய கார் டிரைவரிடம் தங்கமோதிரம், செல்போன் பறிப்பு

சிக்கமகளூரு அருகே சார்மடி மலைப்பாதையில் விபத்தில் சிக்கிய கார் டிரைவரிடம் தங்கமோதிரம், பணம் மற்றும் செல்போனை பறித்து சென்ற 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Update: 2022-05-06 20:53 GMT
சிக்கமகளூரு: சிக்கமகளூரு அருகே சார்மடி மலைப்பாதையில் விபத்தில் சிக்கிய கார் டிரைவரிடம் தங்கமோதிரம், பணம் மற்றும் செல்போனை பறித்து சென்ற 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். 

 பெங்களூருவை சேர்ந்தவர்

பெங்களூரு தேவனஹள்ளியை சேர்ந்தவர் மதுசூதனன். இவர், நேற்றுமுன்தினம் தனது குடும்பத்துடன் தட்சிண கன்னடா மாவட்டம் தர்மஸ்தலா மஞ்சுநாதர், ஒரநாடு அன்னபூர்ணேஸ்வரி, சிருங்கேரி சாரதாம்மன் கோவில்களுக்கு சாமி கும்பிட சென்றனர். 

அதன்படி தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு இரவு நேரத்தில் ஒரநாடுவிற்கு செல்ல சார்மடி மலைப்பாதை வழியாக காரில் சென்று கொண்டிருந்தனர். காரை, மதுசூதனன் ஓட்டினார்.  

 கார் விபத்தில் சிக்கியது

சார்மடி மலைப்பாதையின் ஒரு வளைவில் திரும்பும்போது கார், மதுசூதனின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி தடுப்புச்சுவரில் மோதி நின்றது. ஆனாலும் காரில் இருந்தவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். 

இந்த சந்தர்ப்பத்தில் மதுசூதனனின் செல்போனில் சிக்னல் இல்லை.  இதனால் அவரால் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்க முடியாமல் அவதிப்பட்டார். அப்போது அந்த வழியாக 3 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். இதைப்பார்த்த மதுசூதன், அவர்களிடம் உதவி கேட்டுள்ளார். அப்போது அவர்கள் 3 பேரும் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. 

 தங்கமோதிரம், செல்போன் பறிப்பு

இதைதொடர்ந்து அவர்கள் 3 பேரும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு மதுசூதனனை மிரட்டி அவரிடம் இருந்த 600 ரூபாய் ரொக்கம், கையில் அணிந்து இருந்த 4 கிராம் தங்க மோதிரம் மற்றும் செல்போனை பறித்தனர். இதையடுத்து காரில் இருந்த குடும்பத்தினரிடம் கைவரிசை காட்ட முயன்றனர். ஆனால் அதற்குள் அப்பகுதியில் வாகனங்களில் சிலர் வந்ததால் 3 பேரும் நகை, செல்போன் ஆகியவற்றுடன் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் பறந்து தப்பிசென்றனர்.

இதுகுறித்து மதுசூதனன், அப்பகுதியினர் உதவியுடன் பனகல் போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்