131 மையங்களில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது
தஞ்சை மாவட்டத்தில் 131 மையங்களில் தொடங்கிய 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 31 ஆயிரத்து 511 பேர் எழுதினர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் 131 மையங்களில் தொடங்கிய 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 31 ஆயிரத்து 511 பேர் எழுதினர்.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்றுமுன்தினம் தொடங்கி, நடைபெற்று வருகிறது. இதையடுத்து 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இந்த தேர்வு வருகிற 30-ந் தேதி வரை நடக்கிறது. தஞ்சை மாவட்டத்தில் 131 மையங்களில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது.
இந்த தேர்வு எழுத 411 பள்ளிகளை சேர்ந்த 17 ஆயிரத்து 54 மாணவர்களும், 15 ஆயிரத்து 760 மாணவிகளும் என மொத்தம் 32 ஆயிரத்து 814 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் 247 பேரும் அடங்குவர். இவர்களில் 1,772 பேர் தேர்வு எழுத வரவில்லை. 31 ஆயிரத்து 39 பேர் தேர்வு எழுதினர்.
1,814 பேர் தேர்வு எழுதவில்லை
தனித்தேர்வர்களாக 514 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் 42 பேர் தேர்வு எழுத வரவில்லை. 472 பேர் தேர்வு எழுதினர். மொத்தம் 31 ஆயிரத்து 511 பேர் தேர்வு எழுதினர். 1814 பேர் தேர்வு எழுதவில்லை.
தேர்வு நடைபெறுவதையொட்டி காலை 9 மணி முதலே தேர்வு எழுதும் மையங்களுக்கு மாணவ, மாணவிகள் வரத் தொடங்கினர். பின்னர் அவர்கள் தேர்வு மையங்களின் வளாகத்தில் அமர்ந்து படித்தனர். மாணவர்கள் பதற்றம் இல்லாமல் தேர்வு எழுத ஆசிரியர்கள் அறிவுறுத்தினர். தேர்வு எழுதுவதற்கு முன்பாக கோவில்களில் மாணவ, மாணவிகள் தரிசனம் செய்தனர். ஆசிரியர்கள், பெற்றோரிடமும் ஆசி பெற்று கொண்டு தேர்வு எழுத சென்றனர்.
பறக்கும்படை
தேர்வு 10 மணிக்கு தொடங்கியது. முதல் 15 நிமிடம் வினாத்தாள் படிக்க நேரம் ஒதுக்கப்பட்டது. உடல் ஊனமுற்றோர், கண்பார்வையற்றோர், காதுகேளாத, வாய் பேச இயலாதோர், மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு கூடுதலாக 1 மணிநேரம் தேர்வு எழுத நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. மேலும் தங்களால் தேர்வு எழுத முடியாத மாணவர்கள் சொல்வதை கேட்டு தேர்வு எழுதுவதற்காக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
இந்த தேர்வு மதியம் 1.15 மணி வரை நடைபெற்றது. தேர்வில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்க 161 பறக்கும்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வுகளை கண்காணிக்க முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், கூடுதல் துறை அலுவலர்கள், அறை கண்காணிப்பாளர்கள், அலுவலக பணியாளர்கள் உள்பட 2 ஆயிரத்து 988 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.