கும்பகோணத்தை சேர்ந்த இளம் பெண்ணிடம் ரூ.16½ லட்சம் மோசடி
கிரிப்டோ கரன்சியில் அதிக லாபம் கிடைக்கும் எனக்கூறி கும்பகோணத்தை சேர்ந்த இளம் பெண்ணிடம் ரூ.16½ லட்சம் மோசடி செய்தது குறித்து தஞ்சை சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தஞ்சாவூர்:
கிரிப்டோ கரன்சியில் அதிக லாபம் கிடைக்கும் எனக்கூறி கும்பகோணத்தை சேர்ந்த இளம் பெண்ணிடம் ரூ.16½ லட்சம் மோசடி செய்தது குறித்து தஞ்சை சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கிரிப்டோ கரன்சி
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர் 31 வயது இளம்பெண் ஒருவருக்கு சமூக வலைதளத்தில்(டெலிகிராமில்) மர்ம நபர் ஒருவர் அறிமுகம் ஆகியுள்ளார். அந்த மர்ம நபர், அந்த இளம்பெண்ணை தன்னிடம் இருந்த ஒரு டெலிகிராம் குரூப்பில் இணைத்துள்ளார்.
மேலும் அந்த பெண்ணிடம் கிரிப்டோ கரன்சியில் தினமும் வர்த்தக மதிப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனால் ஒரு வர்த்தக செயலி மூலம் குறிப்பிட்ட தொகை முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
ரூ.16½ லட்சம் மோசடி
இதனை உண்மை என்று நம்பிய அந்த இளம் பெண், மொத்தம் ரூ.16 லட்சத்து 50 ஆயிரத்து 193-ஐ அந்த செயலி மூலம் முதலீடாக செலுத்தி உள்ளார். ஆனால் அந்த நபர் கூறியபடி இளம் பெண்ணிற்கு எந்தவித லாபமும் கிடைக்கவில்லை. இதனால் அந்த பெண், மர்ம நபரிடம் தான் முதலீடு செய்த பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார்.
பணத்தை திரும்ப கொடுக்காத அவர், அந்த டெலிகிராம் குரூப்பில் இருந்து இளம் பெண்ணை நீக்கி உள்ளார்.
போலீசார் விசாரணை
இதனால் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த அந்த இளம் பெண் தஞ்சை சைபர்கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.