சுகாதாரமற்ற முறையில் வைத்திருந்த 10 கிலோ கோழி இறைச்சி பறிமுதல்
சுகாதாரமற்ற முறையில் வைத்திருந்த 10 கிலோ கோழி இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.
கரூர்,
கேரளாவில் உள்ள ஒரு உணவகத்தில் ‘சவர்மா’ சாப்பிட்ட பள்ளி மாணவி பரிதாபமாக இறந்தார். இதையொட்டி கரூரில் அது போன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க சவர்மா தயாரித்து, விற்பனை செய்யும் உணவகங்களில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் நியமன அலுவலர் கலைவாணி தலைமையிலான அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, கரூரில் உள்ள ஒரு உணவகத்தில் சுகாதாரமற்ற முறையில் வைக்கப்பட்டு இருந்த 10 கிலோ கோழி இறைச்சி பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. மேலும், ஒரு கடையில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் கண்டறியப்பட்டு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் கூறுகையில், கரூரில் விதிமுறைகளை பின்பற்றாமல் சவர்மா தயாரித்து விற்பனை செய்தால், அவர்களது கடை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மூடப்படும். மேலும், சவர்மா தயாரிப்பில் ஏதேனும் சுகாதார குறைபாடுகளை கண்டறிய நேரிட்டால், 94440 42322 என்ற மாநில உணவு பாதுகாப்பு துறையின் வாட்ஸ்-அப் எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என கூறினார்.